தேர்தல் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.ரவீந்திரநாத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், உயர்நீதி மன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். இவரை எதிர்த்து ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவனை விட 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இந்தநிலையில் ஓ.பி.ரவீந்திரநாத் வேட்புமனுவில் சொத்து விபரங்களை மறைத்து,
தவறான தகவல்களை அளித்துள்ளதாகவும், பணப் பட்டுவாடா செய்து அவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும் குற்றம் சாட்டி மிலானி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்குவிசாரணையின் முடிவில், தேனி மக்களவை தேர்தலில் ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்
மேலும், அவர் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்குத் தீர்ப்பை நிறுத்தி வைத்தும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணை சூர்யா காந்த் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும் இது வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய கோரி மனுதாரர் மிலானி மற்றும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படியுங்கள்
தப்புமா ஓபிஎஸ் மகனின் எம்.பி. பதவி? உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை!