மருத்துவமனையை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்ற முயன்றால் போராட்டம் வெடிக்கும். ஜெயக்குமார் பகிரங்க எச்சரிக்கை.

By Ezhilarasan BabuFirst Published Sep 16, 2021, 11:33 AM IST
Highlights

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் கல்வெட்டு புதைக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை கொரோனா காலத்தில் ஏராளதான மக்களின் உயிரை காப்பாற்றியது.

ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையை மீண்டும் தலைமைச்  செயலகமாக மாற்ற முயன்றால் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். இந்த பல்நோக்கு மருத்துவமனையால்தான் கொரோனா காலத்தில் ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டது, எனவே அது மருத்துவமனையாகவே தொடர வேண்டும் அவர் வலியுறுத்தினார். 

ராமசாமி படையாச்சியின் 104வது பிறந்த நாளை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி சண்முகம், எம்சி சம்பத் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-  

உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் தனித்துப் போட்டி என பாமக அறிவித்த நிலையில், அது தொடர்பாக நாங்களும் கருத்துக் கூறி அதற்குஅக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு விளக்கமளித்து விட்டார். இந்நிலையில் அதை பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் தனிப்பட்ட கொள்கைகள் உண்டு என்றார்.

மேலும், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் கல்வெட்டு புதைக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை கொரோனா காலத்தில் ஏராளதான மக்களின் உயிரை காப்பாற்றியது. உயிர்காக்கும் இடமாக இருந்த அந்த மருத்துவமனையை மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் புகழுக்காக, அதிமுகவுக்கு எதிராக அதை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்ற  முயற்சித்தால் பொதுமக்களைத் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தவும் அதிமுக தயங்காது என எச்சரித்தார்.

முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீடு மற்றும் அலுவலகங்கள் என 28 இடங்களில் நடந்துவரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இது முழுக்கமுழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கட்சியை முடக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த ரெய்டு நடத்தப்படுகிறது என விமர்சித்தார்.
 

click me!