எங்கப்பன் குதிருக்குள் இல்லை.. போலீஸ் அதிகாரி திடீர் பணியிட மாற்றம்.. பஞ்சாப் காங்கிரஸ் கோல்மால்.

By Ezhilarasan BabuFirst Published Jan 10, 2022, 12:15 PM IST
Highlights

பிரதமரின் பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை, வேண்டுமென்றே காங்கிரஸ் அரசை கவிழ்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி இழிவான அரசியை செய்கிறார் என பஞ்சாப் மாநில முதல்வர் கூறி வந்த நிலையில் தற்போது பெராஸ்பூர் மாவட்ட எஸ்.பி பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பது மாநில அரசின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பிரதமர் மோடி பாதுகாப்பு விவகாரத்தில் அலட்சியம் காட்டிய பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை கலைக்க வேண்டுமென பாஜக  மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில்  பெராஸ்பூர் மாவட்ட சிறப்பு எஸ்பி ஹர்மந்திப் சிங்கர் ஹான்ஸ்சை திடீரென பணியிடமாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மாநில அரசு சரியாகவே செய்திருந்தது என மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி கூறிவரும் நிலையில் காவல் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வகையில் அம்மாநிலத்தில் உள்ள பதிண்டாவுக்கு  விமானம் வாயிலாக சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் இந்திய எல்லையோரம் உள்ள  உசைனிவாலா கிராமத்தில் அமைந்துள்ள தேசிய சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு, பின்னர் 42 ஆயிரத்து 750 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பெரோஸ்பூரில் துவக்கி வைக்க  பிரதமரின் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் திட்டமிட்டபடி  பிரதமர் பதிண்டா விமான நிலையம் வந்தடைந்தார். ஆனால் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமான நிலையத்திலிருந்து உசைனிவாலா கிராமத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக செல்ல இயலாத நிலையில் சாலை வழியாக செல்ல முடிவு எடுக்கப்பட்டு, பஞ்சாப் மாநில காவல் துறைக்கு தலைமை இயக்குநர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டதாக தெரிவித்ததன் அடிப்படையில் பிரதமர் சாலை வழியாக பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில் உசைனி வாலாவுக்கு 30 கிலோமீட்டர் முன்பு அங்குள்ள பாலத்திற்கு அருகில் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற காரணத்தைக் காட்டி பாரத பிரதமரின் வாகனங்கள் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டன. பின்னர் அங்கிருந்து பிரதமரின் வாகனங்கள் தொடர்ந்து செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வேறு வழியின்றி தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு  பதிண்டா திரும்பினார் பிரதமர். டெல்லிக்கு புறப்படும் முன்பு நான் உயிருடன் வந்து சேர்ந்து விட்டேன் என் நன்றியை உங்கள் முதல்வருக்கு கூறுங்கள் என அங்கிருந்த அதிகாரிகளிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பலரும் பஞ்சாப் மாநில அரசை கண்டித்து வருவதுடன், பிரதமரின் ஆயுள் உறுதிபட, அவரின் பாதுகாப்புக்காக பல்வேறு வழபாடு, யாகங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பஞ்சாப் மாநில அரசுக்கு எதிராக பலரும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.  பிரதமர் மோடியின் பாதுகாப்பில் கவனக்குறைவாக செயல்பட்ட பஞ்சாப் மாநில உள்துறை அமைச்சர் டிஜிபி உள்ளிட்டோரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமென பாஜக கோரி வருகிறது இந்நிலையில் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் மாவட்ட சிறப்பு எஸ்பி ஹர்மந்திப் சிங் ஹான்ஸ்  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு மாற்றாக நரேந்திரன் பார்க்கவ் புதிய சிறப்பு எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் மோடியின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடும்படி கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில்,  இந்த பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் பஞ்சாப் அரசு விசாரணைக் குழுக்கள் இரண்டு நாட்கள் விசாரணையை நிறுத்த உத்தரவிட்டது.

மேலும் பஞ்சாப் அரசிடம் உள்ள மோடியின் பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை கைப்பற்றும் படி பஞ்சாப் அரியானா உயர் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டது. அதேபோல் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது, இந்நிலையில் தேர்தல் ஆணையத்திடம் முறையான ஒப்புதலைப் பெற்று சிறப்பு எஸ்பி பணியிடம் மாற்றம் செய்யப்பட்டாரா.? அல்லது மாநில அரசு இந்த முடிவை எடுத்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பிரதமரின் பாதுகாப்பில் எந்த குளறுபடியும் இல்லை, வேண்டுமென்றே காங்கிரஸ் அரசை கவிழ்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி இழிவான அரசியை செய்கிறார் என பஞ்சாப் மாநில முதல்வர் கூறி வந்த நிலையில் தற்போது பெராஸ்பூர் மாவட்ட எஸ்.பி பணியிடமாற்றம் செய்யப்பட்டிருப்பது மாநில அரசின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

click me!