பிப்ரவரி 2ம் வாரம் 'நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்' ? விரைவில் வெளியாகிறது அறிவிப்பு !!

By Raghupati RFirst Published Jan 10, 2022, 12:09 PM IST
Highlights

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் அடங்கிய நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இதற்காக, புதிதாக உருவாக்கப்பட்ட, விரிவாக்கப்பட்ட உள்ளாட்சிகளின் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டு உள்ளன. இந்த விபரம், விரைவில் அரசிதழில் வெளியிடப்பட உள்ளது. மேயர், நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்தப்படும்.

 

சட்டசபையில் இதற்கான சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என்ற தகவல் வெளியானது. ஆனால், மூன்று நாட்கள் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில், இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், நேரடி தேர்தல் சலசலப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அனைத்து மாவட்டங்களிலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தயாரித்தல், தேர்தல் அலுவலர்கள் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடுக்கிவிடப் பட்டுள்ளன. கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தாமதமாகும் என கூறப்பட்டது.ஆனால், உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களை போலவே, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. 

வார்டு மறுவரையறை பணிகள், இட ஒதுக்கீடு பட்டியல் தயாரிப்பு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்த்தல் உள்ளிட்ட தேர்தல் முன்னேற்பாட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை, பொங்கல் விடுமுறைக்குப் பிறகு, வருகிற 17ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 2ம் வாரத்தில் தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

click me!