இரவு 10 மணி வரை இனி கடைகளை திறந்துவைத்திருக்கலாம்..!! அதிரடியாக கட்டுப்பாடுகளை தளர்த்திய எடப்பாடி பழனிச்சாமி..

By Ezhilarasan BabuFirst Published Oct 21, 2020, 3:38 PM IST
Highlights

அதனால்தான் தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாக உள்ளது. மேலும் நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பும் குறைவாக இருந்து வருகிறது.

எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் அவசியத்தை கருத்தில் கொண்டும், அனைத்து வகை கடைகளும், வணிக வளாகங்கள் இரவு 10 மணி வரை இயங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் முழு விவரம்:  கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. மாண்புமிகு அம்மாவின் அரசு இந்த நோய் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 

அதனால்தான் தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாக உள்ளது. மேலும் நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பும் குறைவாக இருந்து வருகிறது.எதிர்வரும் பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் கொரோனா  கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிவாரண வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, காய்கறி கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் 22-10-2020 முதல் இரவு 10 மணி வரை அனுமதிக்கப்படுகின்றன. 

மாண்புமிகு அம்மாவின் அரசு எடுத்து வரும் சீரிய நடவடிக்கைகளாலும், பொது மக்களின் ஒத்துழைப்பாலும் நோய்த்தொற்றின் பரவல் தொடர்ந்து குறைந்து வரும் இந்தச் சூழ்நிலை நீடிக்க எதிர் வரும் பண்டிகை காலங்களில் நோய்த்தொற்று அதிகரிக்காமல் தடுக்க, கடைகள் பொது இடங்களில் அதிகம் கூடுவதை தவிர்க்கவும். முகக் கவசம் அணிவதையும், குறைந்தது 6 அடி இடைவெளி கடைபிடிப்பதையும், அடிக்கடி சோப்பின் மூலம் கைகளை கழுவுவதையும் பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடிக்கவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

click me!