விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய கம்யூனிஸ்டுகள்: வக்கிரத்தோடு பதிவிடுவோரை தட்டி தூக்குங்க என ஆவேசம்..

By Ezhilarasan BabuFirst Published Oct 21, 2020, 2:33 PM IST
Highlights

விஜய் சேதுபதியின் கருத்தை அல்லது முடிவை விமர்சிப்பதற்காக அவரது குழந்தையை முன்வைத்து வக்கிரமான முறையில் பதிவிடுவதை வன்மையாகக் கண்டிப்பதோடு

பாலியல் வக்கிரத்தோடு சமூக வலைத்தளங்களில் பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு திரைக்கலைஞர் விஜய் சேதுபதி ஒப்பந்தமானதையொட்டி எதிரும் புதிருமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.இந்த நிலையில் அவர் அந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என்ற கருத்துடைய சிலர் அவரது குழந்தையை முன்வைத்து பாலியல் வக்கிரத்தோடு சமூக வலைத்தளங்களில் பதிவுகள் இட்டுள்ளனர். 

உலகமே ஒத்துப்போகிற ஒரு கருத்தோடு கூட எந்தவொரு தனி மனிதனும் மாற்றுக் கருத்தை முன்வைப்பதற்கு உரிமையுண்டு. அந்தக் கருத்துக்கு எதிரான கருத்துக்களை கடுமையாக விமர்சிப்பதற்கான உரிமையும் ஒருவருக்கு உண்டு. இந்தக் கருத்து தளத்தைத் தாண்டி எந்தவொரு தனி மனிதரையோ அவருடைய குடும்பத்தினரையோ வக்கிரத்தோடும் வன்மத்தோடும் விமர்சிப்பதற்கான உரிமை எவருக்கும் கிடையாது. விஜய் சேதுபதியின் கருத்தை அல்லது முடிவை விமர்சிப்பதற்காக அவரது குழந்தையை முன்வைத்து வக்கிரமான முறையில் பதிவிடுவதை வன்மையாகக் கண்டிப்பதோடு, இப்படி பதிவிட்டவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழக காவல்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. 

இத்தகைய பதிவுகள் கடந்த காலத்திலும் பெண் பத்திரிக்கையாளர்களை முன்வைத்து வெளிவந்திருக்கின்றன. சில பத்திரிக்கையாளர்களின் மதத்தை முன்வைத்தும் வக்கிரமாக சிலர் பதிவிட்டுள்ளனர். இவை குறித்து சம்மந்தப்பட்டவர்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காவல்துறையிடம் பலமுறை புகாரளித்தும் காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததன் நீட்சியே இத்தகைய நபர்களின் பதிவுகள். விஜய் சேதுபதியின் குழந்தை குறித்த பதிவுகளின் மீது நடவடிக்கை எடுப்பதோடு தமிழக காவல்துறை நீண்ட நாட்களாக நடவடிக்கை எடுக்காமல் ஒருதலைபட்சமாக நடந்து கொண்ட புகார்களின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக காவல்துறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

click me!