அன்புமணியை முதல்வராக்க முடியவில்லை என்ற வருத்தம், ஏக்கம், கனவு என்னை வாட்டுகிறது... ராமதாஸ் சோகம்..!

By Thiraviaraj RMFirst Published Aug 2, 2021, 12:23 PM IST
Highlights

ஆட்சியிலிருந்து 370 சமுதாய மக்களுக்கும் சமூக நீதி இட ஒதுக்கீடு கல்வி வேலைவாய்ப்பு உள்பட பல உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கு அன்புமணி ராமதாஸ் அந்த இடத்தில் (முதலமைச்சர் பதவி) உட்கார வேண்டும்

“நான் மட்டும் பிறக்கவில்லை என்றால் வன்னிய சமுதாயம் கடைக்கோடியில் நின்ற இருக்கும்” என்று பாராட்டு விழாவில் டாக்டர் ராமதாஸ் கூறினார். 

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு போராடிய பாமக நிறுவனர் ராமதாசுக்கு, பாமக, வன்னியர் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் ஆகியவற்றின் சார்பில் பாராட்டு விழா நடந்தது.

இணைய வழியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ், ‘’பாமகவால் ஆட்சியைப் பிடிக்கவில்லை என்ற வருத்தம், ஏக்கம், கனவு என்னை வாட்டிக் கொண்டிருக்கிறது. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் பெருமகிழ்ச்சி கிடையாது. நாம் நம்முடைய இலக்கை இன்னும் அடையவில்லை. ஆட்சியிலிருந்து 370 சமுதாய மக்களுக்கும் சமூக நீதி இட ஒதுக்கீடு கல்வி வேலைவாய்ப்பு உள்பட பல உரிமைகளைப் பெற்றுத் தருவதற்கு அன்புமணி ராமதாஸ் அந்த இடத்தில் (முதலமைச்சர் பதவி) உட்கார வேண்டும் அதை நோக்கித்தான் நம்முடைய பயணம் இருக்க வேண்டும்.

தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்தித்துவிட்டு மற்ற நேரத்தில் படுத்துக் கொண்டு இருந்தால் நம்முடைய இலக்கை அடைய முடியாது. நான் மட்டும் பிறக்கவில்லை என்றால் வன்னிய சமுதாயம் கடைக்கோடியில் ரொம்ப மோசமாக இருந்திருக்கும். இந்த இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் கடந்த 33 ஆண்டுகளில் உங்கள் சாதிக்கு என்ன கிடைத்துள்ளது? என்பதை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் கேளுங்கள். அதன்பின்னர் எதிர்ப்பவர்கள் என்னை அழையுங்கள். நான் உங்களுக்கு புள்ளி விவரங்களோடு புரிய வைக்கிறேன். தற்போது கூச்சல்போட வேண்டாம். நான் சமூக நீதியின் பக்கம் நிற்பவன். தற்போது இட ஒதுக்கீடு பெற்று அதன் மூலம் பாதி இலக்கை அடைந்துள்ளோம். பாமக ஆட்சிக்கு வந்தால் முழு இலக்கை அடைவோம்’’ என்று அவர் பேசினார். 

அன்புமணி ராமதாஸ் வாழ்த்தி பேசும்போது, ’’டாக்டர் ராமதாஸ் இல்லை என்றால் யாருக்கும் இட ஒதுக்கீடு கிடைத்திருக்காது. ராமதாஸ் மட்டும் பிறக்கவில்லை என்றால் 108 ஆம்புலன்ஸ் திட்டம், சேலம் ரயில்வே கோட்டம், தேசிய சுகாதார திட்டம், உட்பட பல திட்டங்கள் வந்திருக்காது. வன்னியர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது. இது முதல் கட்டம் தான். இதற்காக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தற்போதைய முதல்-அமைச்சர், மு. க. ஸ்டாலின் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

 இட ஒதுக்கீட்டை சாதிக்கான இட ஒதுக்கீடு பார்க்காதீர்கள். தமிழகத்தின் வளர்ச்சிக்கானதாக பாருங்கள். பின்தங்கிய சமுதாய முன்னேற்றம் அடைந்தால், தமிழகம் வளர்ச்சி பெறும். ராமதாஸின் உழைப்பு உறுதியின் மூலமாகவே இட ஒதுக்கீடு பெற முடிந்திருக்கிறது. சமூகநீதி பிரச்சினையாக கருதியதால் அதிமுக கொண்டு வந்த சட்டத்தை திமுக ஏற்றுக் கொண்டிருக்கிறது. 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை ராமதாஸ் வாங்கி கொடுத்திருக்கிறார் என்றும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிள்ளைகள் படிக்க வையுங்கள் என்றும் வேலைக்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றும், துண்டு பிரசுரங்கள் வன்னியர் வீடுகளில் கொடுக்க வேண்டும்.

தமிழகத்தில் பாமக ஆட்சி அமைய வேண்டும் என்ற ராமதாஸின் அடுத்த இலக்கை அடைவதற்கு தொண்டர்கள் உறுதியுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்ற வேண்டும் என்ற உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும்.’’ எனப்பேசினார். 

click me!