நாங்கள் சொன்னபடி சபதத்தை நிறைவேற்றி விட்டோம்... மார்தட்டும் துரைமுருகன்..!

By Thiraviaraj RMFirst Published Aug 2, 2021, 11:52 AM IST
Highlights

ஒரு முறை சட்டமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் அப்போதைய திமுக அரசை மூன்றாம்தர அரசு என்று பேசினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் கருணாநிதி இது நான்காம் தர அரசு என்று சொன்னார். 

நாங்கள் சொன்னபடி தலைவர் கருணாநிதிக்கு பேரவையில் தாங்களே படத்திறப்பு விழா நடத்தி சபதத்தை நிறைவேற்ற இருக்கிறோம் என திமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற அவை முன்னவருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார். 
 
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 100வது ஆண்டு விழாவை ஒட்டி சட்டமன்ற வளாகத்தில் கருணாநிதியின் புகைப்படம் இந்திய குடியரசுத் தலைவரால் திறந்து வைக்கப்பட இருக்கிறது. இது குறித்து துரைமுருகன் கூறுகையில், “இந்த நூறு ஆண்டு சட்டமன்றத்தில் 56 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர் கருணாநிதி. அவருடன் நான் 45 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பயணித்து உள்ளேன். தன்னுடைய வாழ்நாளில் பெரும்பகுதியை இந்த சட்டமன்றத்தில் கழித்தவர் கருணாநிதி.

சட்டமன்ற மரபுகளை பின்பற்ற கூடியவர். முதலமைச்சராக இருந்தபோது எதிர்க்கட்சிகளை மதித்தவர். தமிழ்நாடு சட்டமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர், துணை கொறடா, கொறடா, எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர் , முதலமைச்சர் என அனைத்து பதவிகளையும் வகித்த ஒரே தலைவர். ஒரு முறை சட்டமன்ற விவாதத்தில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் அப்போதைய திமுக அரசை மூன்றாம்தர அரசு என்று பேசினார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் கருணாநிதி இது நான்காம் தர அரசு என்று சொன்னார். திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் வியந்து பார்த்தனர். பார்ப்பனர் , சத்திரியர், வைசியர், சூத்திரர் அந்த சமுதாய அடிப்படையில் நான்காவதாக உள்ள சூத்திரர் பிரிவை சேர்ந்த மக்களுக்கான அரசு இது என சொல்லும்போது திமுக உறுப்பினர்கள் அனைவரும் மேசையை தட்டினர்.

கடந்த ஆட்சியின்போது எங்கள் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவரே கருணாநிதிக்கு படத்திறப்பு விழா செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், நான் அப்போதே சொன்னேன் எங்கள் தலைவருக்கு நாங்கள் ஆட்சி அமைத்த பிறகு விழா எடுத்து கொண்டாடுவோம் என்று தெரிவித்தேன். அது தற்போது நிரூபணமாகியுள்ளது” என அவர் கூறினார். 

click me!