தலித் குடிசைகள் இடிப்பு..! சென்னையின் பூர்வகுடிகள் வெளியேற்றம்..! பா.ரஞ்சித் Vs திருமா! நடப்பது என்ன?

By Selva KathirFirst Published Aug 2, 2021, 12:05 PM IST
Highlights

சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது கூவம், அடையாறு கரையோரங்களில் குடிசை போட்டு வசித்து வந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆறுகளில் வெள்ளம் கரை புரண்ட போது குடிசைகளையும் மூழ்கடித்துச் சென்றன. இதனை அடுத்து அப்போதே அவர்கள் அனைவரையும் குடிசைகளை காலி செய்யுமாறு அதிமுக அரசு வலியுறுத்தி வந்தது. 

சென்னையில் அரும்பாக்கம் அருகே கூவம் நதிக்கரையோரமாக பல ஆண்டுகளாக வசித்து வரும் தலித் மக்களின் குடிசை வீடுகள் ஒரே நாளில் இடித்து தரைமட்டமாக்கப்பட்டு அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது கூவம், அடையாறு கரையோரங்களில் குடிசை போட்டு வசித்து வந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆறுகளில் வெள்ளம் கரை புரண்ட போது குடிசைகளையும் மூழ்கடித்துச் சென்றன. இதனை அடுத்து அப்போதே அவர்கள் அனைவரையும் குடிசைகளை காலி செய்யுமாறு அதிமுக அரசு வலியுறுத்தி வந்தது. மாற்று இடம் கேட்டதை தொடர்ந்து சென்னையில் பல்வேறு இடங்களில் குடிசை மாற்று வாரியம் மூலமாக அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன.

ஆனால் இப்படி கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள் பலவும் சென்னையின் புறநகர் பகுதிகளில் அமைந்தன. இதனால் ஏற்கனவே தாங்கள் இருக்கும் குடிசை பகுதிகளில் இருந்து வெளியேற அப்பகுதி மக்கள் மறுத்து வருகின்றனர். உதாரணமாக சென்னை சைதாப்பேட்டை அடையாறு கரை யோரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குடிசை போட்டு வசித்து வருகின்றனர். இவர்களுக்கு சென்னை சங்கர் நகரில் குடியிருப்புகள் கட்டப்பட்டன. ஆனால் தங்கள் தொழில், வேலை எல்லாமே சைதாப்பேட்டையை சார்ந்தே இருக்கும் நிலையில் எப்படி தங்களால் சங்கர் நகரில் இருந்து தினமும் வந்து செல்ல முடியும் என அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இதே போல் தங்கள் குழந்தைகளின் பள்ளி, கல்லூரிகளும் சைதாப்பேட்டையிலேயே உள்ள நிலையில் சங்கர் நகரில் இருந்து எப்படி அவர்கள் தினந்தோறும் சைதாப்பேட்டை வந்து செல்ல முடியும் என்று கேள்வி எழுப்பினர். இதே பாணியில் தான் சென்னை அரும்பாக்கம் கூவம் நதிக்கரையோரம் வசிக்கும் மக்களும் புதிய குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டாலும் தங்கள் குடிசையில் இருந்து வெளியேற மறுத்து வந்தனர். இவர்கள் அனைவருமே அந்த பகுதியை சேர்ந்த தலித் மக்கள்.

கூவம் கரையோரம் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அதிமுக அரசு அகற்றி வந்த அதே வேகத்துடன் திமுக அரசும் பணிகளை தொடர்ந்து வருகிறது. அப்படி தான் கடந்த வாரம் அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில் உள்ள தலித் மக்களின் குடிசைகள் இடித்து தள்ளப்பட்டு அவர்கள் அரசின் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஆனால் வீடுகளை அதிகாரிகள் இடித்த முறை மிகவும் விமர்சனத்திற்கு உள்ளானது.

அதே போல் வீடுகள் இடிக்கப்பட்ட போது தலித் மக்கள் விசிக தலைவர் திருமாவளவனை தொடர்பு கொண்டதாகவும் ஆனால் அவர் கியூபாவிற்கு ஆதரவாக சென்னையில் போராட்டத்தில் இருந்ததால் அங்கு வரமுடியவில்லை என்று விமர்சனங்கள் வந்தன. இதனிடையே இயக்குனர் பா.ரஞ்சித் தரப்பு இந்த விஷயத்தை கையில் எடுத்து சமூக வலைதளங்களில் பிரித்து மேய்ந்தது. தமிழகத்தில் ஆட்சி மாறியும் காட்சிகள் மாறவில்லை, திமுக கூட்டணியில் விசிக இருந்தும் தலித் மக்கள்ளின் வீடுகள் இடிக்கப்படுகின்ற என்று தகவல்கள் பரப்பப்பட்டன.

இதனால் விடுதலைச் சிறுத்தைகளின் இமேஜ் ஒரே நாளில் டேமேஜ் ஆனது. இதனை அடுத்து ஓரிரு நாட்கள் கழித்து திருமாவளவன் அரும்பாக்கம் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். அப்போதே கூட சிலர், ஏன் வீடுகள் இடிக்கப்பட்ட போது அங்கு வரவில்லை என்றுகேள்வி எழுப்பினர். இதன் பின்னணியில் பா.ரஞ்சித் தரப்பு ஆட்கள் இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், குடிசைகள் இடிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக மாற்று குடியிருப்பு வழங்குமாறு வலியுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.

அத்தோடு தலித் மக்களின் வீடு இடிக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் போலியானவை என்றும் போலியான புகைப்படங்களை போட்டு இந்த விஷயத்தை உணர்ச்சிப்பூர்வமாக்க முயற்சி நடப்பதாக திருமா பதிலடி கொடுத்தார். அதாவது பா.ரஞ்சித் தரப்பு போலி புகைப்படங்களை பரப்புவதாக திருமா கூறியிருந்தார். இதனை அடுத்து இந்த விவகாரத்தில் திருமா தரப்பிற்கும் ரஞ்சித் தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. பொதுவாக திருமாவின் விசிகவுடன் நட்பு பாராட்டியே வந்தாலும் சில விஷயங்களில் திருமாவிற்கு எதிரான வேலைகளில் ரஞ்சித் ஈடுபடுவதாக புகார் உள்ளது. அந்த வகையில் அரும்பாக்கம விஷயத்தை பயன்படுத்தி திருமா இமேஜை அவர் பதம் பார்த்துவிட்டதாக கூறப்படுகிறது.

click me!