ஆண்ட பரம்பரையா? ஊமை ஜனங்களா? ரெண்டுல ஒன்னு சொல்லுங்க.. தைலாபுரம் டாக்டரை வம்பிழுத்த சங்க தமிழன்.

By Ezhilarasan BabuFirst Published Nov 29, 2021, 12:16 PM IST
Highlights

இப்போது தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் நாங்கள் ஆண்ட பரம்பரை ஆண்ட பரம்பரை என கூறிக்கொள்கிறார்கள். அப்படி என்றால் மக்கள்தான் யார். குறிப்பாக இளைஞர்களை குறிவைத்து அவர் பேசுகிறார்,  

ஆண்ட பரம்பரை எனக்கூறி வன்னிய இளைஞர்கள் மத்தியில் பாமக நிறுவனம் ராமதாஸ் சாதி வெறியை தூண்டுகிறார் என்றும், அவர் பேசுவது ஆதிக்கத்திற்கான குறியீடு, அடக்குமுறைக்கான குறியீடு என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் சங்கத்தமிழன் விமர்சித்துள்ளார். தொடர்ந்து ராமதாசின் பேச்சுக்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்து வருகிறது என்றும், நீங்கள் ஆண்ட பரம்பரையா அல்லது ஊமை ஜனங்கள் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். தன் மகனை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக வன்னிய இளைஞர்களுக்கு ராமதாஸ் சாதிவெறியை ஊட்டுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அந்த  இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு தங்களுக்கும் உள்ளது என அவர் கூறியுள்ளார்.

தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் ஆண்டபரம்பரை கோஷம் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஆண்ட பரம்பரை என்றால்,  அடிமை பரம்பரை என்று ஒன்று இருக்கிறது என்றுதானே அர்த்தம்.. இதுதான் சாதிய ஆதிக்க உணர்வு ஊற்றுக்கண், இது அடியோடு ஒழிக்கப்பட வேண்டிய ஒரு மனநிலை என முற்போக்காளர்கள் கூறிவருகின்றனர். சமூகத்தில் ஏற்றத்தாழ்வு களையப்படவேண்டும்,  சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என ஒரு காலத்தில் இட ஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுத்த ராமதாஸ் இப்போது வன்னிய சமூகம் இளைஞர்கள் மத்தியில் நீங்கள் ஆண்ட பரம்பரையை சேர்ந்தவர்கள் என பேசியிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. 

அதாவது வன்னியர்களுக்காக இடஒதுக்கீடு போராட்டம் நடத்தி அதன்மூலம் தமிழகத்தின் அரசியல் கட்சியாக உருவெடுத்தது பாமக. காலப்போக்கில் அதிமுக- திமுக என இரண்டு கட்சிகளிலும் மாறி மாறி கூட்டணி வைத்து வந்ததால், அக்காட்சி தலைமையின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. எந்த வன்னியர்களுக்காக கட்சியை ஆரம்பித்து தேர்தல் அரசியலுக்கு வந்தோமோ அதே வன்னியர்கள் முழுவதுமாக பாமக என்ற குடையின் கீழ் அணிதிரள வில்லையே என்பது மருத்துவர் ராமதாஸின் நீண்டநாள் ஏக்கமாக இருந்து வருகிறது. அந்தக் கட்சி எடுத்த தவறான கொள்கை முடிவுகள், கூட்டணி வியூகங்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை, வட இந்தியாவில் பாஜக எப்படி மதவாதத்தை வைத்து அரசியல் செய்கிறதோ, அதே போல பாமக சாதியை வைத்து அரசியல் செய்கிறது என்று அக்கட்சி மீது அழியாத சாதி முத்திரை குத்தப்பட்டுள்ளது.  இது தேர்தலில் அக்கட்சிக்கு பெரும் சரிவை கொடுத்திருப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக அவர்களின் தேர்தல் முடிவுகளே அதற்கு சாட்சியாகவும் இருந்து வருவதை பார்க்க முடிகிறது. 

இந்நிலையில் சமீபத்தில் நடந்த கடலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அவர் மனம் திறந்து பேசினார். அதில் , நீங்கள் ஆண்ட பரம்பரையை சேர்ந்தவர்கள், ஆண்ட பரம்பரை வழி வந்தவர்கள், உங்கள் முன்னோர் படை நடத்தி  பார் ஆண்டவர்கள். மன்னர்களாக இருந்தவர்கள், அவர்களின் வழி வழியாக வந்தவர்கள் தான் சிங்கக்குட்டிகள் ஆகிய நீங்கள். ஆனால் இன்று எல்லாவற்றையும் இழந்து, செங்கோலை இழந்து, ஆட்சிக்கு வராமல் அடுத்தவர்களுக்கு துதி பாடிக் கொண்டிருக்கிறோம். நாம் தமிழகத்தை ஆள வேண்டும், அன்புமணி ராமதாஸ் முதலமைச்சராக வேண்டும். நாம் வெற்றி பெற்றே தீருவோம் என்று நாம் உழைக்க தயாராக இருந்தால் மட்டும் கட்சி பதவியில் இருங்கள். இல்லையெனில் மாடு மேய்ப்பவர்களிடம் பொறுப்பைக் கொடுத்து விடுங்கள். அடுத்த தேர்தலில் நாம் வெற்றி பெற வீடுதோறும் கட்சி நிர்வாகிகள் சென்று திண்ணை பரப்புரை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் சமூக வலைதள பரப்புரையை தீவிரப்படுத்த வேண்டும். நீங்கள் வந்தவழி ஆண்ட பரம்பரை வழி இவ்வாறு அவர் பேசினார். 

குறிப்பாக ஆண்டபரம்பரை விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. பலரும் அவர் பாட்டாளி இளைஞர்களை உணர்ச்சியப்படுத்துவதற்காக இவ்வாறு பேசுவதாக விமர்சித்துவருகின்றனர். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞர் அணித்த தலைவர் சங்கத் தமிழன் ராமதாசின் இந்த பேச்சை விமர்சித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில்,  இந்த விவகாரத்தில் நாங்கள் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாசை தனிப்பட்ட முறையில் வமர்சிக்க வில்லை என்பனை தெரிவித்துக் கொள்கிறோம். தன்மனித விமர்சனம் செய்யகூடாது என்பது விடுதலை சிறுத்தைகளின் கொள்கைகளில் ஒன்று, நாங்கள் விமர்சிப்பது  ஒரு கருத்தியல் முரண்களைதான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே நான் பேசுவது தனிப்பட்ட ராமதாசை பற்றி அல்ல அவரது கருத்துகளை தான், அவர் இப்போது பாட்டாளி இளைஞர்கள் மத்தியில் நாம் ஆண்ட பரம்பரை என பேசுகிறார். இது இளைஞர்களை தூண்டும் பேச்சு. ஆனால் அது போல நாங்கள் எப்போதுமே பேசியதில்லை, நாங்கள் விடுதலையை நோக்கி பயணிக்கும் ஒரு ஞான பரம்பரை. ஆனால் இப்போது வன்னிய இளைஞர்களை ஆண்ட பரம்பரையே சிங்கமே என அவர் கூறுகிறார்.

இப்போது தமிழகத்தில் திரும்பிய பக்கமெல்லாம் நாங்கள் ஆண்ட பரம்பரை ஆண்ட பரம்பரை என கூறிக்கொள்கிறார்கள். அப்படி என்றால் மக்கள்தான் யார். குறிப்பாக இளைஞர்களை குறிவைத்து அவர் பேசுகிறார், இளைஞர்கள் ஏற்கனவே வேலையில்லாத பொருளாதார பிரச்சினை என பல பிரச்சனைகளில் இருந்து வருகின்றனர். இதை கவிஞர் வைரமுத்து தெளிவாக சொல்லி இருக்கிறார், இளைஞர்கள் பாவம்.. சிரச்சேதம் செய்யப்பட்ட தீக்குச்சி..  கரையான் அரிக்கும் சதை ஓலை.. வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால் சோம்பேறி என்ற சொர்க்கத்தில் இருக்கிறான். என கூறியுள்ளார். அப்படி உள்ள  இளைஞர்களுக்கு அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லாமல் அவர்களுக்கு சாதிவெறி ஊட்டுகிறார் ராமதாஸ், ஏற்கெனவே கொரோனாவால் இளைஞர்கள் பலர் வேலை இழந்திருக்கிறார்கள், பலர் வாய்ப்பில்லாமல் திரிகிறார்கள், கொரோனாவுக்கு பிறகு வேலை இல்லை, பொருளாதார வலிமை இல்லை என்ற கவலையில் உள்ள இளைஞர்கள் மத்தியில் பேசுகிறவர் உண்மையிலேயே ஒரு நல்ல தலைவராக இருந்தால், ஒரு நல்ல மருத்துவராக இருந்தால் அந்த இளைஞர்களை நெறிப்படுத்தும் வார்த்தைகளை தானே பேச வேண்டும்.

ஆனால் சுயநலத்திற்காக தன் மகனை முதல்வராக்க வேண்டும் என்பதற்காக, இளைஞர்களை தூண்டுவதுபோல அவர் பேசுவது நியாயமல்ல, சட்டமன்ற தேர்தல் இப்போது வரப்போகிறதா.? இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கிறது அதற்குள்ளாக அவர் இப்படி பேசுவது யாருக்காக என்று தெரியவில்லை. இதுபோன்ற பேச்சுக்கள் மூலம் பாட்டாளி இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார். இளைஞர்கள் என்றால் எங்களுக்கு தலித் இளைஞர்கள் மட்டுமல்ல, வன்னிய இளைஞர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது. இளைஞர்கள் மத்தியில் ஆண்ட பரம்பரை, சத்திரியர் என்று சாதி உணர்வை ஊட்டுவதை விடுதலை சிறுத்தைகள் ஒருபோதும் ஏற்காது. அதை கடுமையாக எதிர்ப்போம், தொடர்ந்து அவருடைய பேச்சு முரணாக இருந்து வருகிறது, நான் கேட்கிறேன் ஆண்ட பரம்பரையா இல்லை ஊமை  ஜனங்களால் என்பதை அவர் தெளிவு படுத்த வேண்டும். அவ்வாறு என அவர் வலியுறுத்தினார்.
 

click me!