ஆட்சி உனக்கு... கட்சி எனக்கு... டீலா..? நோ டீலா..? சசிகலாவை வைத்து எடப்பாடிக்கு கொக்கிபோடும் ஓ.பி.எஸ்..!

By Asianet TamilFirst Published Sep 19, 2020, 1:06 PM IST
Highlights

ஓபிஎஸ்- இபிஎஸ் சமாதானமாகி, ஒன்றாக இணைந்து கட்சியை வலுப்படுத்தி வரும் நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும்  மீண்டும் அதிமுகவே வெற்றி பெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல், அமைச்சர் பெருமக்கள் வரை நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அதிமுக செயற்குழு கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் கே. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் நியமனம் குறித்து காரசார விவாதம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் அதிமுகவின் வளர்ச்சி பணிகள் குறித்தும், கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், தேர்தலை வெற்றிகரமாக எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும், கூட்டணி வியூகம் குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிகிறது. 

 ஏற்கனவே அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து கருத்து வேறுபாடு இருந்து வரும் நிலையில், தற்போது நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் அது குறித்த காரசார விவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதாவது ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா வசமிருந்த அதிமுகவை, இரண்டாக உடைத்தவர் ஒபிஎஸ். சசிகலா சிறைக்கு சென்ற பிறகு அவரது தலைமையில் செயல்பட்டு வந்த அதிமுக, எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழ் செயல்பட ஆரம்பித்தது.  பிறகு ஓபிஎஸ்-இபிஎஸ் சமாதானமாகி ஒன்றாக இணைந்து தற்போது வரை அதிமுக வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. அதிமுகவை கவிழ்த்தே தீருவோம், அதிமுக ஆட்சி இதே களையப்போகிறது, அதோ களையப்போகிறது என எதிர்கட்சியான திமுக ஆருடம் கூறிவந்த நிலையில் ஓபிஎஸ்- இபிஎஸ் இணைந்து, கைகோர்த்து செயல் பட்டதன் மூலம் நங்கூரம் பாய்ச்சிய கப்பலாக அதிமுக தனது 5 ஆண்டு ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்ய உள்ளது. 

ஓபிஎஸ்- இபிஎஸ் சமாதானமாகி, ஒன்றாக இணைந்து கட்சியை வலுப்படுத்தி வரும் நிலையில், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும்  மீண்டும் அதிமுகவே வெற்றி பெறும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதல், அமைச்சர் பெருமக்கள் வரை நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். மக்கள் திமுகவை நம்ப தயாராக இல்லை எனவும், கொரோனா உள்ளிட்ட பல்வேறு நெருக்கடி நேரங்களில் மக்களோடு மக்களாக நின்ற அதிமுகவை மீண்டும் மக்கள் அரியணையில் ஏற்றுவார்கள் எனவும் அதிமுகவினர் நம்பிக்கையுடன் இருந்து வருகின்றனர். 
 சமீபத்தில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்த கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், முதல்வரும் துணை முதல்வரும் மூத்த அமைச்சர்களும் ஒன்றாக பேசி, அதிமுகவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை,  அனைவரும் ஒன்றிணைந்து வெற்றி பெறுவதையே இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் குறித்து மோதல் வெடிக்கப் போகிறது, என காத்திருந்தவர்களுக்கு அந்த அறிக்கை பேரிடியாக அமைந்தது. 

இந்நிலையில் எத்தனை  இடர்பாடுகள் வந்தாலும், கழகத்தை ஒற்றுமையுடன் இருந்து கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்ற கொள்கை முடிவில் இபிஎஸ்-ஓபிஎஸ் இருந்துவருவதாக கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் வேறுபாடுகளை மறந்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முதல்வர், துணை முதல்வர் வியூகம் வகுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில், கட்சி தொண்டர்களின் ஆரவாரத்துடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் அமைச்சர்கள் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது, அதில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆனால் முதல்வர் வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதேபோல் செயற்குழு கூட்டம் குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

கூட்டத்திற்கு இறுதியில் அதிமுக செயற்குழு கூட்டம், தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் வளர்ச்சிப்பணிகள் குறித்து இன்றைய கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது, கட்சியின் மூத்த நிர்வாகிகள், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக அதிமுகவின் செயற்குழு கூட்டம், கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் செப்டம்பர் 28ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் காலை 9: 45 மணி அளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது என ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி கூட்டாக  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நடந்து முடிந்த உயர்நிலை ஆலோசனை கூட்டத்தில் ஒரு சில அமைச்சர்கள் மற்றும்  மூத்த நிர்வாகிகள் இடையே கட்சியின் பல்வேறு விவகாரங்கள் குறித்து காரசார விவாதம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடதக்கது. 
 

click me!