Latest Videos

இடைஞ்சல் தர நினைத்தால் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்.! ஆளுநருக்கு எதிராக சீறிய ஸ்டாலின்

By Ajmal KhanFirst Published Apr 10, 2023, 3:10 PM IST
Highlights

 பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போதோ அல்லது பிரதமரைச் சந்திக்க நான் டெல்லி செல்லும்போதோ தமிழ்நாட்டு அரசுக்கு எதிராகப் பேசுவதையே ஆளுநர் ரவி  வழக்கமாகக் கொண்டிருக்கிறார் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
 

ஆளுநருக்கு எதிராக தீர்மானம்

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராக தனி தீர்மானத்தை முதலமைச்சர் கொண்டு வந்தார். அப்போது பேசிய அவர், இந்த ஆண்டு “ஆளுநர் உரை” கூட்டத்தொடர் நடத்தி முடிக்கப்பட்டு, இன்னும் நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கை தொடர்பான சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிவதற்குள் இரண்டாவது முறையாக மாண்புமிகு ஆளுநர் பற்றி தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய விரும்பத்தகாத ஒரு சூழலை, இந்த அரசு உருவாக்கவில்லை. ஆனால் மாண்புமிகு ஆளுநர் அவர்கள், அரசியல் சட்டத்தையும் கடந்து ஓர் அரசியல் கட்சியின் கண்ணோட்டத்துடன் செயல்படுவதால் இப்படியொரு தீர்மானத்தை இரண்டாவது முறையாக நான் முன்மொழிய வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கிறார்.

எதிர்க்கட்சி துணை தலைவரை மாற்றிடுக..! ஓபிஎஸ்க்கு எதிராக சட்டப்பேரவையில் இறங்கி அடிக்கும் எடப்பாடி

ஆளுநரை நீக்க அதிகாரம்

ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறிய போதிலும், அதை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வழிமொழிந்த போதிலும் அந்தப் பதவி இருக்கும்வரை அதற்குரிய மரியாதையைக் கொடுக்க அவர்கள் முதலமைச்சர்களாக இருந்த நேரத்தில் தவறியதில்லை. அவர்களது வழியைப் பின்பற்றி நானும் அதிலிருந்து இம்மியளவும் விலகியதில்லை இந்த அரசும் தவறியதில்லை.

 

குடியரசுத் தலைவரைப் பதவி நீக்க “இம்பீச்மென்ட்” அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு இருப்பது போல, ஆளுநர்களை நீக்க சட்டமன்றத்திற்கும் “இம்பீச்மென்ட்" அதிகாரம் வழங்கலாமாஎன ஒரு கலந்தாலோசனையையே (Consultation Paper) அப்போது வெளியிட்டு, கருத்து கேட்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.அரசியல் சட்டத்தின் தந்தை என நம் அனைவராலும் போற்றப்படும் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள், “ஆளுநர் என்பவர் மாநில அரசின் நிர்வாகத்தில் குறுக்கிடாத அரசியல் சட்ட ஆளுநராகச் செயல்பட வேண்டும்" என்பதை அரசியல் நிர்ணய சபையிலேயே வலியுறுத்தியிருக்கிறார். 

நண்பராக இருக்க தயாராக இல்லை

2010-இல் உச்சநீதிமன்ற மாண்புமிகு தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஆளுநர் நியமிக்கப்பட்டுவிட்டால் அவர் அரசியல் சட்டத்திற்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டுமே தவிர அரசியல் கட்சிக்கு அல்ல
என்று “பி.பி சிங்கால்" வழக்கில் மிகத் தெளிவாகவே வரையறுக்கப்பட்டுள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், அந்த அரசு உள்ள மாநில மக்களுக்கும் வழிகாட்டுபவராகவும், நண்பராகவும் ஆளுநர் இருக்க வேண்டும்" என்று எத்தனையோ உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் நமது ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் "நண்பராக" இருப்பதற்குத் தயாராக இல்லை என்பதை அவர் பதவியேற்றதிலிருந்து செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் வெளிப்படுத்தி வருகிறது.

மோடியை சந்திக்கும் போதெல்லாம் ஆளுநர் பேசுகிறார்

ஆளுநர் திறந்த மனத்துடன் அரசுடன் விவாதிக்க வேண்டுமே தவிர. பொதுவெளியில் நிர்வாக நடவடிக்கைகளை விவாதிப்பது சரியல்ல. இந்த அரசின் கொள்கைகளை, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுதனை இந்தச் சட்டமன்றத்தின் இறையாண்மையை, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்டுள்ள மசோதாக்களைக் கொச்சைப்படுத்தி பொதுவெளியில் பேசுகிறார் அவர் ஆளுநர் என்ற நிலையைத் தாண்டி அரசியல்வாதியாகப் பேசுகிறார். அந்தப் பதவிக்கு என்னென்ன தகுதிகளைச் சர்க்காரியா அறிக்கை வரையறுத்துக் கூறியுள்ளதோ. அந்தத் தகுதிகளையெல்லாம் மறந்துவிட்டுப் பேசுகிறார். அதுவும் குறிப்பாக, மாண்புமிகு பிரதமர் அவர்கள் தமிழ்நாடு வரும்போதோஅல்லது பிரதமரைச் சந்திக்க நான் டெல்லி செல்லும்போதோ தமிழ்நாட்டு அரசுக்கு எதிராகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

ஒப்புதல் அளிப்பதை தவிர வழியில்லை

ஆன்லைன் சூதாட்டத்தைத் தடைசெய்யும் மசோதாவை இந்த அவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிய பிறகும் இளைஞர்கள் தற்கொலைகள் தொடரும் நிலையில் கூட அதற்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார். அதற்கு மேல் சென்று, "withhold" என்றால் நிராகரிக்கப்பட்டதாகப் பொருள் என்று ஆளுநர் விதண்டாவாதமாக பேசுகிறார் இந்த “withhold" அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்கவே கூடாது என்று சர்க்காரியா அறிக்கை கூறியதைக் கூட அறியாதவர் போல் பேசுகிறார். அரசியல் சட்டப் பிரிவு 200-இன்கீழ் "ஆளுநரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட மசோதாவைச் சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பிவிட்டால் அந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர வேறு வழி ஆளுநருக்கு இல்லை" என்பதே தெளிவு.

அரசியல் சட்டம் ஆளுநருக்குத் தெரியவில்லை என்று நான் கூறமாட்டேன் ஆனால் அவருக்கு இருக்க வேண்டிய “அரசியல் சட்ட விசுவாசத்தை”, “அரசியல் விசுவாசம்" அப்படியே விழுங்கி விட்டது என்றே இந்த அவையில் பதிவு செய்ய விரும்புகிறேன். அரசியல்சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள "மதச்சார்பின்மைக்கு" எதிராகப் பேசுகிறார். தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துகிறார் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்குக் குறுக்கே நிற்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தை இறையாண்மை மிக்க இந்த நூற்றாண்டு வரலாறு கொண்ட சட்டமன்றத்தை அவமதிக்கிறார் நாள்தோறும் ஒரு கூட்டம் நாள்தோறும் ஒரு விமர்சனம் என்ற நிலையில் ராஜ்பவனை அரசியல் பவனாக மாற்றிக் கொண்டிருக்கிறார். வகுப்புவாத எண்ணம் கொண்ட சிலரின் ஊதுகுழலாக ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநர் பேசி வந்த கருத்துகளுக்கு பதிலுக்குப் பதில் சொல்லி சட்டமன்றத்தை அரசியல் மன்றமாக நான் மாற்ற விரும்பவில்லை. 

கைகட்டி வேடிக்கை பார்க்க மாட்டோம்

அதேநேரத்தில் சட்டமன்றத்துக்கு அரசியல் நோக்கத்தோடு இடைஞ்சல் தர நினைத்தால் அதனைக் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்பதைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அரசியல் நோக்கத்துக்காக அரசியல் லாப நஷ்டங்களுக்காக, யாரோ சிலரின் விருப்பங்களுக்காக நாம் இந்த அவையில் சட்டங்களை நிறைவேற்றுவது இல்லை எடுத்தவுடன் சட்டம் போடுவதும் இல்லை. நீட் விலக்குச் சட்டமாக இருந்தாலும் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டமாக இருந்தாலும். எத்தனைக்கட்ட பரிசீலனைக்குப் பிறகு இவற்றை நிறைவேற்றினோம் என்பதை இந்த அவைக்கு விளக்கத் தேவையில்லை ஓய்வுபெற்ற மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் குழுவின் பரிந்துரைப்படி நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது.

தமிழர்கள் ஏமாந்தவர்கள் அல்ல

ஆன்லைன் சூதாட்டத் தடைச் சட்டத்தை, தன்னுடைய விருப்பு வெறுப்பால் தடை போட்டுவிட்டு உண்மைக்கு மாறான காரணங்களைச் சொல்லி மழுப்பி வந்தால் அதனை நம்பும் அளவுக்கு தமிழ்நாடு ஏமாந்தவர்கள் இருக்கக்கூடிய மாநிலம் அல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியிருந்தார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தில்,  அதிமுக உறுப்பினர்கள் ஏற்கெனவே வெளிநடப்பு செய்துவிட்ட நிலையில், அவையில் இருந்த 146 பேரில் 144 பேர் ஆளுநருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு கொடுத்தனர். 

இதையும் படியுங்கள்

ஆயிரம் முறை பேசி உள்ளேன் ஒரு முறை கூட என் முகத்தை காட்டவில்லை..!எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த துரைமுருகன்

click me!