
கட்சி ஆரம்பிப்பது நம் தேசத்தை பொறுத்தவரையில் செம சிம்பிள் காரியம்! இமெயில் ஐ.டி. ஓப்பன் பண்ணுவதுபோல் போகிற போக்கில் ஏதோ ஒரு முன்னேற்ற கழகத்தை துவக்கிவிடலாம்.
ஆனால் ஒரு மாநில கட்சியை அந்த மாநிலத்தை தொடர்ந்து ஆளும் இயக்கமாகவும், தேசிய அளவில் மூன்றாவது பெருங்கட்சியாகவும் உருவேற்ற முடியுமென்றால் அது ஜெயலலிதா போன்ற ஸ்பெஷல் ஐகான்களால் மட்டுமே சாத்தியம்.
சீட்டுக் கட்டுக்களால் கட்டப்பட்ட கோபுரம் போன்றதுதான் கட்சிகளின் கட்டமைப்பும். அ.தி.மு.க.வும் அதற்கு விதிவிலக்கில்லை. அ.தி.மு.க. எனும் சீட்டுக்கட்டு கோபுரத்தின் உச்சத்தில் கலசம் போல் ஜெயலலிதா உட்கார்ந்திருப்பதாக அவர் உயிரோடு இருந்தவரை உலகம் எண்ணியது.
ஆனால் இப்போதுதான் புரிகிறது அந்த கோபுரத்தின் அடிமட்ட சீட்டுக்களாய் இருந்தார் என்பது. பேஸ்மெண்டு தகர்ந்ததும் பில்டிங்கு கிடுகிடுவென ஆடிக் கொண்டிருக்கிறது.
எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அ.தி.மு.க. இரண்டாக பிளந்த போது *ஜா* அணியில் போய் நின்றவர்களுக்கு ஜானகி மீது பரிதாபம்தான் இருந்தது.
ஆனால் *ஜெ*யை நோக்கி நகர்ந்தவர்களுக்கு அவர் மீது பயம் இருந்தது. அந்த பயம்தான் ஜெ.வின் அரசியல் முதலீடு. தன் மீதான பயத்தை ராஜாஜி ஹால் வாசலில் பூத உடலாய் படுத்திருந்த வரையில் ஜெ.,வால் மெயிண்டெய்ன் செய்ய முடிந்ததுதான் அவரது ஆக பெரிய வெற்றி.
தன்னை சுற்றி இருப்பவர்களிடம் இணக்கம் காட்டி, சிரித்து பேசி அரசியலையும், அரசையும் ஜெ.,வால் நடத்தியிருக்க முடியும். ஆனால் தன்னை சுற்றி ஒரு இரும்புத்திரை போட்டுக் கொண்டு நெருங்கமுடியாத தலைமையாகவே இருந்தார்.
கட்சியினரையும், வாக்காளர்களையும் தன்னை அண்ணாந்து பார்க்க வைத்தபடி இருந்ததே ஜெ., வெற்றி சூத்திரமாக இருந்தது. சக மனுஷியாக தோளோடு தோள் நின்றிருந்தால், அடுத்த நொடி அவரை இழுத்து வைத்து செல்ஃபி எடுக்க ஆரம்பித்திருப்பார்கள் நம்மவர்கள்.
பயம் விலகியிருந்தால் ஜெ., பற்றிய பிரம்மாண்ட ஃபீலிங் மறைந்திருக்கும், பிறகு சறுக்கலுக்கும் அதுவே சாவி கொடுத்திருக்கும். ஜனநாயக தேசத்தில் இப்படியான சர்வாதிகார போக்கே தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்துகிறது என்பது பெரும் கேவலம்தான்.
ஆனாலும் இந்த சூட்சமம் புரியாமல் இறங்கி வந்ததால்தான் நமக்கு நாமே நடைபயணத்தின் போது கூடலூரில் ஆட்டோ டிரைவர் ஸ்டாலினோடு செல்ஃபி எடுக்க துணிந்ததும், கன்னத்தில் அறைவாங்கி சர்ச்சையானதும்.
தன் கார் டிரைவர் முதல் தலைமை செயலர் வரை, கிளை நிர்வாகி வரை அவைத்தலைவர் வரை அத்தனை பேரையும் கண் பார்வையிலேயே இயக்கிய ஒரே தலைவர் ஜெ.,தான் என்றால் யாரால் மறுக்க முடியும். அமைச்சர்கள், மா.செ.க்கள் என அத்தனை பேரின் ஜாதகத்தையும் உளவுத்துறையின் தொடர் கண்காணிப்பில் வைத்திருந்தார்.
இதையும் மீறி ஆடுபவர்களை கொஞ்சம் ஆடவிட்டு பிறகு ஒரு நாள் ஓங்கி அடிப்பார் பாருங்கள்! அடி வாங்கிய நபருக்கான வலியை விட ‘*அம்மா நம்மளையா கவனிக்க போறாங்க?* என்று ஆட ஆரம்பித்திருக்கும் மற்ற நிர்வாகிகளுக்கு உருவாகும் பயம்தான் மிக பெரிதாய் இருக்கும்.
பதவி கிடைத்த நபர் பூங்கொத்தை வழங்கிவிட்டு *நன்றிங்க அம்மா* என்பதை தாண்டி ஒரு வார்த்தை பேச முடியாததற்கும், பதவியிழந்த நபர் *அம்மா கொடுத்த பதவி. அவங்களே எடுத்திக்கிட்டாங்க* என்பதை தவிர்த்து வேறு எதையும் சொல்ல முடியாததற்கும் அவர் மீதான பயம்! பயம்! பயம்! இதுதான் ஜெயலலிதாவை ஒரு இரும்புப் பெண்மணியாய் மாற்றிக் காட்டியது.
தமிழக அரசுக்கு கடன் கொடுக்க வரும் மத்திய மந்திரிகள் *மேம்! மேம்!* என்று ஜெ.,விடம் பம்மியதும், அரிதினும் அரிதாக பேட்டி வாய்ப்பு கிடைத்த பத்திரிக்கையாளர் *வுட் யூ மைண்ட், இஃப் ஐ ஆஸ்க் லைக் திஸ்?* (நான் இந்த கேள்வியை கேட்டால் உங்களுக்கு கோபம் வருமா?) என்று கேட்டுவிட்டே கேள்விக்கு போவதற்கு இந்த பயம்தான் காரணம்.
வளர்ந்த விதத்தில் ஜெ., துணிச்சலான பெண் என்றாலும், இந்த துணிச்சல் மூலம் அவர் தன்னை பற்றி உருவாக்கியிருந்த பயம்தான் அவரை இரும்புப் பெண்மணியாக்கி காட்டியிருந்தது. ஆனால் எந்த ஆயுதத்தால் நாம் வெல்கிறோமோ, அதே ஆயுதத்தாலேயே வீழவும் செய்வோமென்பதே இயற்கையின் நியதி.
*பயம்* என்கிற ஒரே கான்செப்டால்தான் தலைமைக்கு எதிராக துளி உணர்வும் காட்டாமல் மிலிட்டரி கட்டுப்பாட்டுடன் இருந்தனர் கழக நிர்வாகிகள். ஆனால் ஜெ., இல்லாத நிலையில், ரெய்டு உள்ளிட்ட நடவடிக்கைகளால் தங்கள் சொத்துக்கள் பறிபோய்விடுமோ என்கிற *பயம்*தான் நிர்வாகிகளை புரட்சி செய்ய வைத்திருக்கிறது.