
தமிழக ஆளுங்கட்சியில் அதிமுகவின் இரு அணிகளும் இணைவது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 5 மாதத்தில் தமிழக அரசியலில் நடந்த பல்வேறு மாற்றங்கள் மக்களை அதிர்ச்சியிலும், ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியுள்ளது.
டிசம்பர் மாதம் ஜெயலலிதா மறைவு, ஜனவரியில் ஓ.பி.எஸ்.க்கு எதிரா அமைச்சர்களின் குரல், இதனால், அவர் தனி அணி உருவாக்கியது, பிப்ரவரியில் சசிகலா சிறை, மார்ச் மாதம் ஆர்கே நகர் தேர்தல், ஏப்ரலில் தினகரனை கட்சியில் இருந்து விலக்கியது என மாதந்தோறும் பரபரப்பு சம்பவம் நடந்து வருகிறது.
இந்நிலையில், வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னம் தேவை. அதற்காக பிளவுபட்ட அதிமுகவின் இரு அணிகளும், மீண்டும் இணையும் விழா விரைவில் நடைபெற உள்ளது.
இதையொட்டி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது.
இதில், பி.எச்.பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், மைத்ரேயன், வனரோஜா, செம்மலை, மனோஜ் பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றுள்ளனர். நாளை இரு அணிகளும் பேச்சு வார்த்தை நடத்த உள்ளன. அதில் விதிக்கப்பட வேண்டிய நிபந்தனைகள் குறித்து விவாதிப்பதாக தெரிகிறது.