
கடந்த டிசம்பர் 5ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலமானார். இதையடுத்து அதிமுகவில் பிளவு ஏற்பட்டு இரு அணிகளாக செயல்பட்டன.
கடந்த 12ம் தேதி நடக்க இருந்த ஆர்கே நகர் சட்டமன்ற இடைத் தேர்தல், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக கூறி ரத்து செய்யப்பட்டது. மேலும், பிளவு பட்ட இரு அணியினரும் கட்சி சின்னமான இரட்டை இலையை கைப்பற்ற டெல்லி தலைமை தேர்தல் ஆணையம் வரை சென்றனர்.
இதற்கிடையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக வருமான வரித்துறையினர், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் அதிரடி ரெய்டு நடத்தினர். இதைதொடர்ந்து இரட்டை இலை சின்னத்தை கைப்பற்ற இடை தரகர் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனால், அதிமுகவின் சசிகலா அணியாக இருந்த ஒரு பிரிவு, எடப்பாடி பழனிச்சாமி அணியாக மாறியது. இதைதொடர்ந்து சசிகலா மற்றும் அவரது உறவினர்களை கட்சியிலும், ஆட்சியிலும் இருந்து நீக்குவதாக அறிவித்தனர்.
அதே நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் ஜூலை மாதத்துக்குள் நடத்த வேண்டும் என மாநில தேர்தல் ஆணையத்துக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால், சின்னம் இல்லாமல், கட்சியின் எந்த பணியையும் செய்ய முடியாது என்ற நிலைக்கு வந்த இரு அணிகளும், மீண்டும் இணைவது என முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் சென்னை ராஜ்பவனில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்றுள்ளனர். அங்கு கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த சந்திப்பின் போது, அதிமுகவில் உள்ள இரு அணிகளும் ஒன்று சேர உள்ளது. இதில், சில எம்எல்ஏக்கள் டிடிவி.தினகரனுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இதனால், ஆட்சியை தொடர வாய்ப்பு உள்ளதா என ஆலோசனை நடத்துகின்றனர்.
மேலும், ஓ.பன்னீர்செல்வம் அணியுடன் இணைந்த பின்னர், அவரது தரப்பினருக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும். அப்போது, அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்பது குறித்தும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.
இரு அணிகளும் ஒன்று சேரும் நேரத்தில் அமைச்சர், மக்களவை துணை சபாநாயகர் ஆகியேர் கவர்னரை சந்தித்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.