ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதுதான் உண்மையான நடவடிக்கை; மின்சாரம், தண்ணீரை துண்டிப்பது அல்ல...

First Published May 26, 2018, 6:44 AM IST
Highlights
The real action is to permanently close the sterile plant g.k. vasan


கோயம்புத்தூர்
 
ஆக்கபூர்வமான நடவடிக்கை என்பது நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பதுதான் என்று தமிழ் மாநில காங்கிரஸ் மாநில தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

தமிழ் மாநில காங்கிரசு மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் கோயம்புத்தூர் வந்தார். அவரை, மாநில துணை தலைவர் கோவை தங்கம், மாவட்ட தலைவர்கள் வி.வி.வாசன், கே.என்.ஜவஹர், குணசேகரன் ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர். 

அப்போது மாநில துணை தலை வர் குனியமுத்தூர் ஆறுமுகம், மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா துணை தலைவர்கள் சி.பி.அருண்பிரகாஷ், அருனேசுவரன் மற்றும் சரத்விக்னேஷ், கார்த்திக் கண்ணன், சி.ஆர்.ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர். 

பின்னர் அவர் கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

அதில், "தூத்துக்குடி ஸ்டெர்லெட் ஆலையை மூட வேண்டும் என்று வற்புறுத்துவது அரசியலுக்கு அப்பாற்பட்ட பிரச்சனை. மனிதர்களுடைய உயிர் பிரச்சனை. காலம் தாழ்த்தாமல் ஸ்டெர்லெட் ஆலையை நிரந்தரமாக மூடக்கூடிய அறிவிப்பை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வெளியிட வேண்டும். 

தற்போது அங்கிருக்கிற மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்கவில்லை. தூத்துக்குடி நகரை முடக்கி வைத்திருக்கிறது தமிழக அரசு. அங்கு உடனடியாக சகஜ நிலைக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளை புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிற காவல்துறை உயர் அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் செய்ய வேண்டும்.

மக்களுடைய மன நிலைக்கு ஏற்றவாறு அங்கே நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தான் முக்கியம். அவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற்று உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். 

மக்களின் மன நிலையை புரிந்துகொண்டு நியாயமாக ஆட்சி செய்பவர்கள் மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற நிலை வருங்காலங்களில் ஏற்படும்.

அங்கு 100 நாள் போராட்டம் நடந்தது. அதன் முக்கியத்துவம் என்ன? மக்களின் மன நிலை என்ன? என்று புரிந்து கொள்ள ஆட்சியாளர்கள், காவல் துறை அதிகாரிகள் தவறிவிட்டனர். தமிழக அரசின் உளவுத்துறையின் தோல்வியையே இது காட்டுகிறது.

துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணியை சேர்ந்தவர்கள் இரண்டு நாட்களாக எல்லா பகுதிகளிலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி இனிமேல் இதுபோன்ற கண்மூடித்தனமான செயலில் தமிழக அரசு ஈடுபடக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே மின்சாரம் கொடுக்கவில்லை. தண்ணீர் வினியோகம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. ஆனாலும், ஆக்கபூர்வமான நடவடிக்கை என்பது நிரந்தரமாக ஸ்டெர் லைட் ஆலையை மூட வேண்டும் என்பதுதான் அங்கே இருக்கிற மக்களின் கருத்து. காலம் தாழ்த்தாமல் அந்த பணியை செய்து நியாயமான கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்க வேண்டும்.

மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் அவர்கள் மீது இனிமேல் மத்திய, மாநில அரசுகள் திணிக்க நினைத்தால் அது ஒருபோதும் எடுபடாது என்பதற்கு தூத்துக்குடி சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு. 

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் விலைவாசி உயரும் அபாயம் உள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவந்து விலையை குறைக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
 

click me!