
கேட்டது நீதி... கிடைத்தது சிறை: கந்தக பூமியில் வெந்து மீண்ட நாட்கள் என்ற தலைப்பில் தனது முகநூல் பக்கத்தில் தனக்கும் தங்களது கட்சியினருக்கும் நேர்ந்த கொடுமையை தனது முகநூல் பக்கத்தில் எழுதி வருகிறார்.
இன்று குருவின் இன்றைய நிலைக்குக் காரணமான அன்றைய அடக்குமுறை! என்ன என பதிவிட்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி மீது ஏவப்பட்டது திட்டமிட்ட அடக்குமுறை என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் வன்னிய சங்கத் தலைவரும், அப்போதைய பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவருமான மாவீரன் குரு மீது அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட தேசியப் பாதுகாப்பு சட்டத்தின்படியான கைது நடவடிக்கைகள் தான்.
நீதிகேட்டு போராட்டம் நடத்தியதற்காக நான் சிறையில் வாடிய நாட்களை விட வன்னியர் சங்கத் தலைவர் குரு முதல் சாதாரண தொண்டன் வரை மொத்தம் 134 பாட்டாளி சொந்தங்கள் குண்டர் சட்டத்திலும், தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தது தான் என்னை மிகவும் வாட்டியது. இவர்களில் அதிகபட்சமாக ஜெ.குரு 219 நாட்கள் கொடூரமான முறையில் சிறையில் அடைக்கப்பட்டு கொடுமைக்குள்ளாக்கப்பட்டார். அப்போது சிறையில் அவர் அனுபவித்தக் கொடுமைகள் தான் இப்போது அவரது நுரையீரலை மிகக்கடுமையாக பாதித்து மருத்துவமனையில் சேர்க்கும் நிலைக்கு ஆளாக்கியுள்ளன.
விழுப்புரத்தில் தடையை மீறிப் போராட்டம் நடத்தியதற்காக நானும், ஜி.கே. மணி உள்ளிட்ட நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டதை சரியான நடவடிக்கை என்று கூறுபவர்களால் கூட அதன்பின்னர் நடைபெற்ற கைது நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எந்தப் போராட்டத்திலும் பங்கேற்காமல், சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் தங்கியிருந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு காரணமே கூறப்படாமல், நான் கைது செய்யப்பட்ட நாளான 30.04.2013 அன்று காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அப்பட்டமான பொய்யும், அநீதியான கைதும்!
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டை அடுத்த தாழம்பூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பனங்காட்டுப்பாக்கம் என்ற இடத்தில் கடந்த 03.09.2012 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பேசியது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் கடந்த 30.04.2013 அன்று அவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விவரங்கள் எதையும் குருவிடம் காவல்துறையினர் தெரிவிக்கவில்லை. ஆனால், கடந்த 10.04.2013 அன்று இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த காவல்துறையினர், வழக்கு விவரங்கள் அவருக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அவர் தலைமறைவாகி விட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் பெறப்பட்ட பிடி ஆணையின்படி காவல்துறையினர் கைது செய்தனர். பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட பிறகும்கூட, குரு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் என்ற முறையில் சட்டப் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றபோது, அவருக்கு காவல்துறையினர் பாதுகாப்பு அளித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் இவ்வளவையும் மறைத்துவிட்டு, அவர் தலைமறைவாகிவிட்டதாக பொய்யானத் தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்து, பிடி ஆணை பெற்று கைது செய்தனர்.
பிணையைத் தடுக்க அடுத்தடுத்து கைது
இந்த வழக்கில் அவர் பிணை பெற்று விடுதலையாகி விடக்கூடாது என்பதற்காக அடுத்தடுத்து மேலும் 4 வழக்குகளில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்ட 5 வழக்குகளின் விவரம் வருமாறு:
1. வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக தாழம்பூர் காவல்நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கு.
2. 05.05.2012 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக மாமல்லபுரம் காவல்நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கு.
3. 05.05.2012 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பேசியதாக மாமல்லபுரம் காவல்நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கு.
4. 25.04.2013 அன்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழாவில் அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பேசியதாக மாமல்லபுரம் காவல்நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கு.
5. கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக திட்டக்குடி காவல்நிலையத்தில் தொடரப்பட்ட வழக்கு.
இந்த வழக்குகளில் அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட குரு, ஒவ்வொரு வழக்காக பிணை பெற்று வந்த நிலையில், அவரை முடக்கும் நோக்குடன் மே மாதம் 10&ஆம் தேதி தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து தமிழக அரசு ஆணையிட்டது.
135 பேர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது
மாவீரன் குருவைத் தொடர்ந்து மாவட்ட, மாநில நிர்வாகிகள் என 34 பேர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும், 101 குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டனர். குண்டர் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் போன்ற தடுப்புக்காவல் சட்டங்களில் ஒருவரைக் கைது செய்வதற்குச் சில வரைமுறைகள் உள்ளன. அதன்படிதான் இச்சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும். ஆனால் ஜெயலலிதாவோ இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் சட்டத்தையும் விதிமுறைகளையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தடுப்புக் காவல் சட்டங்களை விருப்பம்போல பயன்படுத்தினார்.
தேசியப்பாதுகாப்பு சட்ட நடவடிக்கை ரத்து
ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட 34 பேரில் முதல்கட்டமாக 28 பேர் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் முறையீடு அளிக்கப்பட்டது. முறையீட்டு மனுக்களை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சகம், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஒருவரை கைது செய்யும்போது கடைபிடிக்க வேண்டிய 11 விதிமுறைகளில் ஒன்றுகூட பாட்டாளி மக்கள் கட்சியினர் விவகாரத்தில் பின்பற்றப்படவில்லை என்று கூறி, வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு உள்ளிட்ட 20 பேர் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை ரத்து செய்து ஆணையிட்டது. தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் 14 (1) பிரிவின் கீழ் இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது.
மத்திய அரசை மதிக்காத ஜெயலலிதா
தேசியப் பாதுகாப்பைப் பொறுத்தவரை, மத்திய அரசுதான் அதிகபட்ச அதிகாரம் கொண்டதா-கும். இதுதொடர்பான விவகாரங்களில் மத்திய அரசு முடிவுதான் இறுதியானதாகும். எனவே, மத்திய அரசின் உத்தரவை மதித்து ஜெ. குரு உள்ளிட்ட 20 பேரையும் ஜெயலலிதா விடுதலை செய்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசின் உத்தரவை மதிக்காத தமிழக அரசு ஜெ.குரு உள்ளிட்ட 14 பேரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்திலும், இருவரை குண்டர் சட்டத்திலும் கைது செய்தது. மீதமுள்ள 4 பேர் மட்டுமே விடுதலை செய்யப்பட்டனர்.
இரண்டாம் கட்டமாக 6 பேர் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் விசாரித்த மத்திய உள்துறை அமைச்சகம், அவர்கள் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தையும் ரத்து செய்தது. ஆனால், அதையும் மதிக்காத ஜெயலலிதா அவர்களை மீண்டும் தேசியப்பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தார். தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினரும், வன்னிய சங்கத்தினரும் விடுதலையாகிவிடக் கூடாது என்பதுதான் ஜெயலலிதாவின் எண்ணம் ஆகும். அதனால்தான் அவர் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல், மத்திய அரசை எதிர்க்கத் துணிந்தார். இதுதான் ஜெயலலிதாவின் பழிவாங்கும் வெறியாகும்.
உயர் நீதிமன்றம் கண்டனம்
தேசியப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை இரத்து செய்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை மதிக்காமல், தங்கள் மீது இரண்டாவது முறையாக தேசியப் பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதை எதிர்த்து, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பழனி, மாரி ஆகியோர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் தனபாலன், சி.டி. செல்வம் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்திரசேனன் தாக்கல் செய்த பதில் மனுவில், “பழனி, மாரி ஆகியோர் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் தன்னிச்சையாக இரத்து செய்துள்ளது. அவர்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கள விசாரணை நடத்தாமலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. எனவேதான் அவர்கள் இருவரையும் மீண்டும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டேன்” என்று கூறியிருந்தார்.
மத்திய அரசைவிட மாநில அரசு பெரிதா?
இதற்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். “மாநில அரசைவிட, மத்திய அரசு அதிக அதிகாரம் கொண்டது ஆகும். மாவட்ட ஆட்சியரான உங்களது உத்தரவை இரத்து செய்து மத்திய உள்துறை செயலாளர் ஆணையிட்டால் அதை நீங்கள் மதித்து நடக்க வேண்டும். அவ்வாறு நடக்காமல் மத்திய அரசுக்கு சவால்விடும் வகையிலும், கட்டளையிடும் வகையிலும் நடந்துகொள்வது முறையல்ல” என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சித்திரசேனனை நீதிபதிகள் எச்சரித்தனர். அதுமட்டுமின்றி, அடுத்த ஒரு வாரத்தில் இந்த வழக்கின் மீதான விசாரணையை நடத்தி முடித்த நீதிபதிகள், பழனி, மாரி ஆகிய இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட இவர் பின்னாளில் மணல் கொள்ளை ஊழலில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
குரு மீது மீண்டும் மீண்டும் வழக்கு
தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் வன்னியர் சங்கத்தலைவர் ஜெ. குரு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டது செல்லாது என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்த நிலையில், அவர் மீது மீண்டும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஜெயலலிதா பாய்ச்சினார். குருவுக்கு எதிராக மட்டும் மொத்தம் 4 முறை தேசியப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. இதனால், மற்றவர்கள் விடுவிக்கப்பட்ட போதிலும், குரு விடுதலையாக முடியாத சூழல் உருவானது. குருவின் விடுதலைக்கு எதிராக அ.தி.மு.க. அரசு பல்வேறு சதிகளை செய்தது.
மருத்துவ சிகிச்சை மறுப்பு
கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட குருவு-க்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்டன. கடுமையான உடல்நலக் குறைவு காரணமாக, அவரது கால்கள் மரத்துப்போயின. இதற்காக மருத்துவம் அளிக்கவேண்டும் என்று சிறை அதிகாரிகளிடம் முறையீடு அளிக்கப்பட்டது. ஆனால், அவருக்கு மருத்துவம் வழங்க சிறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். பின்னர், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த உயர்நீதிமன்றம் குருவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும்படி தமிழக அரசுக்கும், சிறைத் துறைக்கும் ஆணையிட்டது. ஆனால், இறுதிவரை குருவுக்கு மருத்துவம் அளிக்க சிறைத்துறை முன்வரவில்லை. மாறாக, அவரை காவல் நீட்டிப்பு என்ற பெயரில் சென்னையில் இருந்து திருக்கழுக்குன்றம், அரியலூர், திட்டக்குடி என பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச் சென்று காவல்துறையினர் கொடுமைப்படுத்தினர். இதனால் குரு கடுமையான உடல்நலக் குறைவுக்கு ஆளானார்.
மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காமல் பல ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு அழைத்துச் சென்று அலைக்கழித்தது தான் மாவீரன் குருவின் உடல்நிலையை மிகக்கடுமையாக பாதித்தது. மாவீரன் குருவின் இன்றைய நிலைக்கு ஜெயலலிதாவின் அடக்குமுறையும், பழிவாங்கலும் தான் காரணமாகும்.
219 நாட்களுக்குப் பிறகு குரு விடுதலை
மத்திய அரசும், உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்தாலும் திமிர்பிடித்த ஜெயலலிதா அரசு திருந்தவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது தொடர்ந்து அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டது. ஆனால், அவற்றை முறியடித்து தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்ட 135 பேரில் மாவீரன் குரு தவிர மற்ற 134 பேருக்கு அடுத்த ஒரு சில மாதங்களில் விடுதலை பெறப்பட்டது. ஆனால், மாவீரன் மீது அடுத்தடுத்து 4 முறை தேசியப்பாதுகாப்பு சட்டம் பாய்ந்ததால் அவரது விடுதலை மட்டும் சிறிது காலம் தாமதமானது.
எனினும், தமிழக அரசின் அடக்குமுறைகளை முறியடித்து, குரு மீதான தேசியப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கை செல்லாது என்று 04.12.2013 அன்று சென்னை உயர்நீதிமன்றத்திடம் தீர்ப்பு பெற்றோம். இதைத்தொடர்ந்து, 219 நாட்களுக்குப் பிறகு வன்னியர் சங்கத் தலைவர் குரு விடுதலையானார். இந்த செய்திதான் என் இதயத்தை வாட்டிய வலியைப் போக்கியது.
பாட்டாளிகள் மீதான மனித உரிமை மீறல்!
நாளை எழுதுகிறேன்.