திருப்பத்தூர் பகுதியில் அனுமிதியின்றிறி ஊர்வலமாக சென்றதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக கூறி அண்ணாமலை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் மீது ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அண்ணாமலை நடை பயணம்
பிரதமர் மோடியின் சாதனையை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையிலும், தமிழகத்தில் பாஜகவை வளர்ச்சியடைய செய்யவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில் கடந்த ஆண்டு பாதயாத்திரையை தொடங்கினார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடை பயணம் செய்யும் அண்ணாமலை அந்த பகுதி மக்களின் கோரிக்கை கேட்டறிந்து வருகிறார். மேலும் திமுக அரசின் செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்தநிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில், நடை பயணம் மேற்கொண்ட அண்ணாமலை, சிறுபான்மையின மக்களுக்கு மத்திய பாஜக அரசு வழங்கிய சலுகைகளை பட்டியிட்டார்.
சிறுபான்மையினருக்கு பாஜக செய்தது என்ன.?
கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, காங்கிரஸ் ஆட்சியில், மத்திய அரசு பணிகளில் மொத்தம் 4.5 சதவீதம் தான் சிறுபான்மையினர் இருந்தனர். தற்போது அது 10.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. பிரதம மந்திரியின் வீடுகட்டும் திட்டத்தில் 31 சதவீத வீடுகள் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டுள்ளது. பாரத பிரதமர் முத்ரா கடன் வழங்கும் திட்டத்தில் பயனடைந்தவர்களில் 36 சதவீதம் சிறுபான்மையினர். பிரதமரின் விவசாய கௌரவ நிதி திட்டத்தில் பயன்பெறுவோரில் 33 சதவீதம் பேர் சிறுபான்மையினர். பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் பயன்பெறுவோரில் 37 சதவீதம் பேர் சிறுபான்மையினர் என, காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியை விட, நமது பாரதப் பிரதமர் தலைமையிலான மத்திய அரசின் நலத்திட்டங்கள், சிறுபான்மையினருக்கு உரிய முறையில் அதிகமாகவே சென்றடைந்துள்ளதாக கூறினார்.
அண்ணாமலை மீது வழக்கு
அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நேதாஜி ரோடு பகுதியில் நடைபயணம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி மறுத்தது. ஆனால் அனுமதியை மீறி அண்ணாமலை நடைபயணம் மேற்கொண்டார். இதனால் பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் 13 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பொதுமக்களுக்கு இடையூறாக அளித்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் ஆம்பூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே அண்ணாமலை மீது இதே போன்று அனுமதி மறுத்த பகுதியில் நடைபயணம் சென்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்