கூட்டத்தை விரட்டியடித்த போலீசார்... அங்கேயே நின்ற ஏட்டு பலி... அதிர்ஷ்டத்தால் உயிர் தப்பிய மக்கள்..!

By Thiraviaraj RMFirst Published Dec 22, 2021, 12:12 PM IST
Highlights

கடைகள், சரக்கு லாரிகள் நிறுத்தும் இடம் இருப்பதால் அந்த பகுதியில் இரவு நேரத்திலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்

மதுரையில் பழமையான கட்டடம் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் காவலர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொரு காவலர் படுகாயம் அடைந்தார். 

மதுரை நெல்பேட்டை பகுதியில் மொத்த விற்பனை கடைகள், சரக்கு லாரிகள் நிறுத்தும் இடம் இருப்பதால் அந்த பகுதியில் இரவு நேரத்திலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில், அப்பகுதியில் விளக்குத்தூண் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் கண்ணன் மற்றும் சரவணன் ஆகியோர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நெல்பேட்டை அருகே உள்ள பழமையான கட்டிடம் ஒன்றின் முன்பாக சிலர் கூட்டமாக நின்று கொண்டிருப்பதை கண்ட காவலர்கள், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

பிறகு அங்கேயே காவலர்கள் சிறிது நேரம் நின்றிருந்த போது கட்டிடத்தின் முதல் மாடி சுவர் திடீரென்று இடிந்து அவர்கள் மேல் விழுந்தது. இந்தக் காவலர்கள் அங்கு நின்றிருந்த கூட்டத்தை அப்புறப்படுத்தாமல் இருந்திருந்தால், அந்த சுவர் அங்கு நின்றிருந்தவர்கள் மீது விழுந்து இருக்கும். ஆனால் விதி, அங்கு நின்றிருந்தவர்களை விரட்டி விட்ட போலீசாரை அந்த சுவர் பலி வாங்கி விட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளில் சிக்கி இருந்த கண்ணனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மற்றொரு காவலர் சரவணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து பகல் நேரத்தில் நிகழ்ந்திருந்தால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனிடையே விளக்குத்தூண் போலீசார் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டிருக்கிறார்.

இருவரையும் மீட்டு ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, ​​சரவணன் உயிரிழந்தார். முதலுதவி சிகிச்சைக்கு பின், கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட கண்ணன், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீஸ் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்ஹா ​​மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்து நடந்த இடத்தை மதுரை ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர் இன்று ஆய்வு செய்தார்.

அதேபோல், திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள மரூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் முத்து (45). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.  இந்த நிலையில், நேற்று புதிய வீடு கட்டுவதற்காக முத்து தனக்கு சொந்தமான காலனி வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

மாலை மேல் பகுதியில் இடித்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மேற்கூரை சென்டிரிங் இடிந்த விழுந்ததில் முத்து பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவருடன் வீட்டை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சேகர் (50) என்பவர் படுகாயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

click me!