தமிழக மக்கள் என்னை அங்கீகரிக்கவில்லையே... தமிழிசை செளந்திரராஜன் ஆதங்கம்..!

By Asianet TamilFirst Published Feb 6, 2021, 9:03 PM IST
Highlights

எனக்கு தமிழக மக்களிடமும் சின்ன ஆதங்கம் உள்ளது. தமிழ் மக்கள் என்னை சரியாக அங்கீகரிக்கவில்லை என்ற வருத்தம் இன்றளவும் உண்டு என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
 

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் கலந்துரையாடல் சந்திப்பை நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், “நான் தமிழ் மகள். அதன்பிறகுதான் தெலங்கானா சகோதரி. இங்கே எல்லோருடைய அன்பையும் சேர்த்து வைத்த கொண்டுதான் தெலங்கானாவுக்கு சென்றேன். என்னை ஆளுநராக அறிவித்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆளுநராக என்னை அறிவிப்பார்கள் என்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.


இந்தியாவிலேயே முதன் முறையாக ஓர் இளையவர் எப்படி மாநிலத்தின் ஆளுநராக செயல்படுவார் என்று பல்வேறு விமர்சனங்கள் பொறுப்பேற்ற முதல் நாளே வந்தது. ஆனால், கொரோனோ காலகட்டத்தில் தெலங்கானா ராஜ்பவனை மக்கள் பவனாகவே இருந்தது. எனக்கு தமிழக மக்களிடமும் சின்ன ஆதங்கம் உள்ளது. தமிழ் மக்கள் என்னை சரியாக அங்கீகரிக்கவில்லை என்ற வருத்தம் இன்றளவும் உண்டு.
ஆளுநர் என்பதைவிட அக்கா என்றுதான் பெரும்பாலும் என்னை அழைப்பார்கள். ஆளுநர் என்ற எண்ணம் என் மனதில் எப்பொழுதுமே இருந்ததில்லை. அரசியலில் ஒரு பெண் மேலே வருவது சாதாரண விஷயம் இல்லை. பல இரவுகள் தூங்காமல் இருந்திருக்கிறேன். பாஜகவில் அதிக நாட்கள் தலைவராக இருந்தவர் என்ற பெருமை என்னை மட்டுமே சேரும். என்னை குள்ளம் என்று சொன்னார்கள். ஆனால், என் எண்ணத்திலும் உள்ளத்திலும் உயர்ந்துதான் இருக்கிறேன். சுருட்டை முடி என்றார்கள். என் முடிதான் சுருட்டை. ஆனால், நான் எதையும் சுருட்டவில்லை.” என்று தமிழிசை செளந்திரராஜன் பேசினார். 
 

click me!