
கட்சியில் இருந்து சிலர் பிரிந்து சென்றதால் கட்சி பிளவுபட்டதாக அர்த்தம் இல்லை எனவும், அதிமுகவின் 3 அணிகளும் மத்திய அரசுக்கு அடிமையாக உள்ளது என கூறுவது முட்டாள்தனமானது எனவும் நிதித்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக இரண்டாக பிரிந்தது. காரணம் கட்சியை சசிகலாவும் ஆட்சியை ஒபி.எஸ்சும் வழிநடத்தி வந்த நிலையில், சசிகலாவின் பதவி ஆசை கட்சியை பிளவடைய செய்தது.
தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு செல்லவே அவரின் இடத்தை டிடிவியும், ஒபிஎஸ் இடத்தை எடப்பாடியும் நிரப்பினர்.
இதையடுத்து சசிகலாவுக்கும் ஒபிஎஸ்க்கும் ஏற்பட்ட அதே கருத்து வேறுபாடு எடப்பாடிக்கும் தினகரனுக்கும் ஏற்பட்டது.
இதனால் இரண்டாக இருந்த அதிமுக மூன்றாக உடைந்தது. மூன்று அணியாக இருந்தாலும் அனைவரின் கருத்தும் ஒருமித்த கருத்தாக குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கே ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.
இதனால் பாஜகவின் கை பொம்மையாக அதிமுக மாறிவிட்டது என எதிர்கட்சிகள குற்றம் சாட்டி வந்தன.
இந்நிலயில், திருச்சியில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியார்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுகவினர் தனித்தனி அணியாக செயல்படுவது அண்ணன், தம்பி பிரச்சினை போன்றது என்றும், கட்சியில் இருந்து சிலர் பிரிந்து சென்றதால் கட்சி பிளவுபட்டதாக அர்த்தமில்லை என்றும் தெரிவித்தார்.
அதிமுகவின் 3 அணிகளும் மத்திய அரசுக்கு அடிமையாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் கூறுவது முட்டாள்தனமானது என்றும் மத்திய அரசிடம் ரூ.17 ஆயிரம் கோடி நிதி வரவேண்டி உள்ளதால் மோடியை சந்தித்து வருவதாகவும் விளக்கமளித்தார்.
மேலும் தமிழகத்தில் தொடர்ந்து அதிமுக ஆட்சி தான் அமையும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.