
பரோலில் வெளிவந்த சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் ஆச்சரியமளிக்கிறது என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து இரு தினங்களுக்கு முன்பு சசிகலா பரோலில் வெளிவந்தார். சென்னை, தி.நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் வீட்டில் தங்கி உள்ளார்.
பல்வேறு நிபந்தனைகளுடனே சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது. பரோலில் வெளிவந்த சசிகலா இன்று மூன்றாவது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராசனைச் சந்தித்து வருகிறார்.
இந்த நிலையில், எம்.எல்.ஏ. கருணாஸ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று தலைமை செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், பரோலில் வெளிவந்த சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் ஆச்சரியமளிப்பதாக கூறினார்.
பரோலில் வெளிவந்த பேரளிவாளனுக்கே அரசியல் தலைவர்களை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் ஆச்சரியமளிக்கிறது என்றார்.
சினிமா துறைக்கு தற்போது கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த கருணாஸ், கேளிக்கை வரியால் சினிமா தொழில முடங்கிப் போகும் நிலை வந்துவிடக் கூடாது என்றும் கூறினார்.