இபிஎஸ்க்கு அங்கீகாரமா.? மோதல் ஏற்பட வாய்ப்பு..! தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி பரபரப்பு புகார்

By Ajmal KhanFirst Published Dec 30, 2022, 8:06 AM IST
Highlights

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து எடப்பாடி பழனிசாமிக்கு சட்ட ஆணையம் அனுப்பிய அழைப்பை 7 நாட்களுக்குள் திரும்ப பெற வேண்டும் எனவும், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு அனுப்ப வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு புகார் அளித்துள்ளார். 
 

அதிமுகவில் அதிகார மோதல்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என பிளவு பட்டுள்ளது. இந்தநிலையில் எந்த அணிக்கு அதிமுக சொந்தம் என இரு தரப்பும் மோதிக்கொண்டு வருகிறது.  உச்சநீதிமன்றத்திலும் வழக்கானது நிலுவையில் உள்ளது.  தேர்தல் ஆணையத்திலும் இரு தரப்பும் முறையீடு செய்துள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மத்திய அரசும் ஜி 20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள வலியுறுத்தி கடிதம் அனுப்பியது. மேலும் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அதிமுகவின் வரவு செலவு கணக்குகளை தேர்தல் ஆணையம் ஏற்றக் கொண்டுள்ளது. இந்தநிலையில் ஓபிஎஸ் அணிக்கு மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தேர்தல் ஆணையத்தின் சட்ட ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.  


இபிஎஸ்க்கு சட்டத்துறை கடிதம்

ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்கும் வகையில் தேர்தல் ஆணையத்தில் சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. அதிமுகவை பொறுத்த வரை எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு கருத்துகளை கேட்டுள்ளது. வருகிற ஜனவரி மாதத்திற்க்குள் பதில் அளிக்கும் படி தெரிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ் அணியினர் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளனர். ஒரே நாடு, ஒரே தேர்தல்  விவகாரம் குறித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு மத்திய சட்ட ஆணையம் அனுப்பிய அழைப்பிதழை 7 நாட்களுக்குள் திரும்ப பெற வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி புகார் அளித்தார்,

தேர்தல் ஆணையத்தில் புகார்

புகார் அளித்த பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக கருத்து கேட்ட  கூட்டத்திற்கு மத்திய சட்ட ஆணையம் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு அனுப்பி உள்ளதாகவும் இது தவறு என தெரிவித்தார். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வம் இருந்து வரும் நிலையில் அதிமுகவினரிடையே மோதலை ஏற்படுத்தக் கூடிய வகையில் இந்த கடிதம் உள்ளதாக கூறினார். எனவே மதிய சட்ட ஆணையம் 7 நாட்களுக்குள் அழைப்பிதழை திரும்ப பெற்று அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ பன்னீர் செல்வத்திற்கு அழைப்பு அனுப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.  இது குறித்து தமிழக தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்துள்ள நிலையில் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதாக தெரிவித்தார். மேலும் 7 நாட்கள் வரை இந்த விவகாரத்தில் மத்திய சட்ட ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க  இருப்பதாக தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

குழப்பமான அறிக்கைகளை வெளியிட்டு மக்களைக் குழப்ப வேண்டாம்… எடப்பாடிக்கு அமைச்சர் காந்தி வலியுறுத்தல்!!

click me!