3வது அலையில் இருந்து தப்பிக்க ஒரே வழி.. இங்கிலாந்த பார்த்து கத்துக்கனும்.. அலறும் அமைச்சர் மா.சு..

By Ezhilarasan BabuFirst Published Jul 16, 2021, 4:28 PM IST
Highlights

மூன்றாவது அலையை எதிர்கொள்ள தமிழகத்தில் அனைத்து கட்டமைப்புகளும் தயார் நிலையில் உள்ளது, ஆனாலும் மூன்றாவது அலை எதிர்கொண்டுள்ள இங்கிலாந்து மிகப் பெரிய பாதிப்புகளை சந்தித்து இருக்கிறது. ஆனால் அங்கு உயிரிழப்பு என்பது மிகக் குறைவு. அதற்கு காரணம் அந்நாட்டில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை இயக்க அனுமதி வேண்டும், எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து துவங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகள் மத்திய அமைச்சரிடம் வைக்கப்பட்ட நிலையில், அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து உரிய பதில் அளிப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்திற்கு போதிய அளவில் தடுப்பூசி வழங்க வேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கோரிக்கை மனு கொடுத்துள்ளதுடன், அவைகள் குறித்து நேரில் விளக்கியுள்ளார். நேற்று இந்த சந்திப்பு நிகழ்ந்த நிலையில் சென்னை திரும்பிய அவர், அசோக் நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் முடிதிருத்துவோருக்கான தடுப்பூசி செலுத்தும் மையத்தை துவக்கிவைத்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-  மத்திய அமைச்சரை சந்திக்க தான் டெல்லி சென்றிருந்த போது மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதற்கான விழிப்புணர்வு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என பிரதமர் பாராட்டியதாக  கூறினார். 

அதே நேரத்தில் மற்ற மாநிலத்துடன் சேர்த்தே தமிழகத்துக்கும் தாராளமாக தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்ததாகவும் அமைச்சர் கூறினார். அதேபோல் தமிழகத்திலேயே தடுப்பூசி உற்பத்தி செய்வதற்காக தயார் நிலையில் உள்ள செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை இயக்க அனுமதிக்க வேண்டும் என  கோரிக்கை வைக்கப்பட்டது எனவும், உடனே அதை  பரிசீலித்து முடிவு தெரிவிப்பதாக அவர்கள் கூறினர் எனவும், அதேபோல் தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரியில் 1,600 இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும் அமைச்சர் கூறினார். அதேபோல் அதிமுக ஆட்சிக்காலத்தில் துவங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்தார். 

மொத்தத்தில் தாங்கள் வைத்த 13 அம்ச கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் உறுதி அளித்த தாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு கூறினார். தற்போது மூன்றாவது அலையை எதிர்கொள்ள தமிழகத்தில் அனைத்து கட்டமைப்புகளும் தயார் நிலையில் உள்ளது, ஆனாலும் மூன்றாவது அலை எதிர்கொண்டுள்ள இங்கிலாந்து மிகப் பெரிய பாதிப்புகளை சந்தித்து இருக்கிறது. ஆனால் அங்கு உயிரிழப்பு என்பது மிகக் குறைவு. அதற்கு காரணம் அந்நாட்டில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. எனவே நாமும் அது போல முழுமையாக தடுப்புச் செலுத்திக்கொள்ளும் பட்சத்தில், அதிலிருந்து தப்பிக்க முடியும் என அவர் கூறினார். 

 

click me!