அரசு விழாவுக்கு வந்தது குத்தமா..? டென்ஷன் செய்த அதிகாரிகள்..கடுப்பான முன்னாள் அமைச்சர்

By Raghupati R  |  First Published Dec 27, 2021, 1:29 PM IST

அம்மாபேட்டை அருகே புதிய பாலத்தை திறக்க வந்த முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. தடுத்து நிறுத்தப்பட்டார். அங்கு போலீசார் குவிக்கப்பட்டதால் திடீர் பதற்றம் ஏற்பட்டது.


அம்மாபேட்டை அருகே உள்ளது குறிச்சி ஏரியா. இங்குள்ள ஆதி திராவிடர் காலனி அருகே உள்ள சித்தார் ஓடையின் குறுக்கே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.42 லட்சத்து 76 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக சிறிய பாலம் கட்டப்பட்டது. பாலம் கட்டி முடிக்கப்பட்டதை தொடர்ந்து அதன் திறப்பு விழா நேற்று காலை 9 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இதையொட்டி பாலத்தில் வர்ணம் பூசப்பட்டு, வாழை தோரணங்கள் கட்டப்பட்டன. 

Latest Videos

undefined

இதையடுத்து இந்த பாலத்தை திறப்பதற்காக அதிமுக  முன்னாள் அமைச்சரும், தற்போதைய பவானி தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.சி.கருப்பணன் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார். அப்போது பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன், பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோர் அங்கு வந்து கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ.விடம் பாலத்தை திறக்க மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கவில்லை என கூறியதாக தெரிகிறது. 

இதை கேட்டதும் அங்கு வந்த அ.தி.மு.க.வினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிகாரிகளிடம் அ.தி.மு.க.வினர் கூறுகையில், ‘ஒரு சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வை பாலத்தை திறக்க விடாமல் தடுப்பது எந்தவிதத்தில் நியாயம்,’ என கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதைத்தொடர்ந்து அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் தடுக்க அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். 

இதன்காரணமாக அந்த பகுதியில் திடீர் பதற்றம் ஏற்பட்டது. பின்னர் ஒரு மணி நேரம் காத்திருந்துவிட்டு பாலத்தை திறக்காமல் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ. அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

click me!