
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் ஆண்போல் வேடமிட்டு, 15 வயது சிறுமி நுழைய முயற்சித்தபோது, அவரை தேவஸ்தான அதிகாரிகள் சுற்றிவளைத்து பிடித்து காப்பகத்து அழைத்துச் சென்றனர்.
பம்பை நகரிலேயே அந்த சிறுமியை பிடித்து, தேவஸ்தான அதிகாரிகள் தங்கள் அலுவலகத்தில் தங்கவைத்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் பாரம்பரியாக 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட வயதுவந்த பெண்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதி இல்லை. இது நீண்டகாலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஆந்திரா மாநிலம் நெல்லூரில் இருந்து 15-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சபரிமலைக்கு தரிசனம் செய்ய வந்திருந்தனர். அதில் ஒரு பக்தர் மட்டும் பார்க்கவும், உடல் அமைப்பிலும் ஆண்போல் அல்லாமல் வேறுபட்டு இருந்தார். ஆனால், தலைமுடி மற்றும் உடை அனைத்தும் ஆண் போல் மாற்றப்பட்டு இருந்தது.
இந்த பக்தர்கள் அனைவரும் பம்பையில் இருந்து சபரிமலைக்கு நேற்று புறப்பட்டு சென்றபோது, சந்தேகமடைந்த தேவஸ்தான அதிகாரிகள் அந்த பக்தர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அந்த சந்தேகப்படும் நபரிடம் விசாரணை நடத்தியதில் 15வயது சிறுமி என்பது தெரியவந்தது.
உடன் வந்தவர்கள் ஆண்வேடமிட்டு அந்த சிறுமியை சாமி தரிசனம் செய்ய அழைத்து வந்திருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, மலைக்குச் செல்ல 10வயதுக்கு
மேற்பட்டவர்களுக்கு அனுமதியில்லை என்ற விவரத்தைகூறி அந்த சிறுமியை தங்கள் அலுவலக காப்பகத்தில் தங்கவைத்தனர்.
இது குறித்து பம்பை தேவஸ்தான அதிகாரி பி.பி. திலீப் குமார் கூறுகையில் “ அந்த சிறுமியை பார்க்கும்போது ஆண்போலவே இருந்ததால் முதலில் நாங்களும் ஏமாந்துவிட்டோம். ஆணைப்போல் தலைமுடி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
ஆனால், அவரின் உடல்அசைவுகள், உடல்கூறுகள் ஆணுக்கு உரியதுபோல் இல்லாமல் இருந்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்து விசாரணை நடத்தினோம். எங்களின் பெண் அலுவலர்கள் மூலம் ஆய்வு செய்ததிதல் அது 15 வயது சிறுமி எனத் தெரியவந்தது.
இதையடுத்து, எங்களின் பாதுகாப்புடன் காப்பகத்தில் தங்கவைத்தோம். அதேசமயம், இந்த சிறுமியுடன் வந்த மற்ற பக்தர்கள் அனைவரும் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் தரிசனம் முடித்து பம்பைக்கு வந்தவுடன் அவர்களை எச்சரித்து இந்த சிறுமியை ஒப்படைத்தோம். சபரிமலை சீசனின்போது, பருமடைந்த சிறுமிகளைக் கூட சிறுவர்கள் போல் வேடமணிந்து அழைத்து வருவது தொடர்ந்து வருகிறது. இந்த ஆண்டு சோதனையை தீவிரப்படுத்தி இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் தேசிய சுகாதார இயக்கத்தின் தலைமைப் பொறியாளர் ஜி.ஜே.அஞ்சலா சபரிமலைக்குச் சென்று ஆய்வுநடத்தினார். 50வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலைக்குள் வரக்கூடாது என்ற விதிமுறையை அஞ்சலா மீறிவிட்டார் என கோயில் நிர்வாகம் சார்பில் குற்றம்சாட்டப்பட்டு அது சர்ச்சையாக இருந்து வருகிறது. அது தொடர்பாக கேரள முதல்வருக்கு அஞ்சலா கடிதமும் எழுதியுள்ளார்.
இந்த சூழலில் 15 வயதுசிறுமி சபரிமலைக்குள் நுழைய முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.