
உயிரோடு இருப்பவர்களுக்கு உள்ள கைரேகையில் உயிரோட்டம் இருக்கும் என்றும் ஜெயலலிதாவின் கைரேகையில் உயிரோட்டம் இல்லை என்றும் சென்ற ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதிக்கு முன்பாகவே ஜெயலலிதா இறந்திருக்கலாம் என்று திமுகவைச் சேர்ந்த டாக்டர் சரவணன் கூறியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து உத்தரவிட்டார்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விபரங்கள் தெரிந்தோர், உறுதிமொழி பத்திர வடிவில், நவம்பர் 22 ஆம் தேதிக்கு முன் அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, விசாரணைக் கமிஷன் தனது பணியை இன்று துவக்கியது. திமுகவைச் சேர்ந்த சரவணன், இன்று விசாரணை கமிஷன் முன் ஆஜராகி விளக்கமளித்தார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது வேட்புமனுவில் ஜெயலலிதா கைரேகையில் சந்தேகம் உள்ளதாக ஏற்கனவே அவர் புகார் தெரிவித்திருந்த நிலையில் இன்று அவர் கூடுதல் ஆவணங்களுடன் ஆஜரானார்.
இதன் பின்னர், சரவணன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், கைரேகை உள்ள சந்தேகங்களை விசாரணை ஆணையத்தில் எடுத்துரைத்தோம். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது அதிமுக வேட்பாளர் மனுவில் உள்ள அவரது கைரேகையில் உயிரோட்டமில்லை என்றார். உயிரோடு இருப்பவர்களுக்கு கைரேகை இருக்கும் என்றார்.
சந்தேகங்களை நீதிபதி விசாரணை கமிஷனிடம் எடுத்துரைத்துள்ளோம். ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கைக்கும், அப்போல்லோ மருத்துவமனையின் அறிக்கைக்கும் முரண்பாடு உள்ளது குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளோம். டிசம்பர் 5 ஆம் தேதிக்கு முன்னதாகவே ஜெயலலிதா இறந்திருக்கலா என்ற சந்தேகம் உள்ளது எனவும் நாளை நடைபெறும் விசாரணையும் ஆஜராக உள்ளதாகவும் சரவணன் கூறினார்.