
தஞ்சாவூர் அருகே புதிதாக கட்டப்பட்ட பாலம் திறக்கும் முன்பெ விரிசல் விட்டதிற்கு காரணம் முறையில்லாமல் கட்டியிருப்பதே எனவும் இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 52 கோடியில் கமிஷன் வாங்கியிருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேரீஸ்கார்னர் பகுதியில் ரெயில்வே கீழ்பாலம் உள்ளது. மழைகாலங்களில் கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்குவதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படும். அப்போது வாகனங்கள் எல்லாம் சாந்தப்பிள்ளை கேட் வழியாக செல்லும்.
ரெயில் வரும்போது கேட் பூட்டப்பட்டு இருந்தால் வாகனங்கள் வெகுநேரம் காத்திருந்து செல்ல வேண்டியது வரும்.
இதனை தவிர்க்கும் வகையில் சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த திமுக ஆட்சியில் ரூ. 42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் ஆட்சி மாறியதும் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி நீண்ட நாட்களுக்கு பிறகு ரூ. 10 கோடி கூடுதலாக சேர்த்து ரூ. 52 கோடியில் பாலத்தை கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் மேம்பால பணி முடிவடையும் என பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த என்ஜினியர்கள் தெரிவித்த நிலையில் சில மாதங்களுக்கு முன்புதான் நிறைவடைந்தது.
வரும் 29ம் தேதி புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறக்க உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து அந்த மேம்பாலத்தில் தேவைக்கு பயன்படுத்தும் முன்பே விரிசல் ஏற்பட்டுள்ளது.தகவலறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை மேம்பாலத்தை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விரிசல் சரி செய்யப்பட்டே பிறகே மேம்பாலம் திறக்கப்படும் எனவும் அதுவரை மேம்பாலத்தை மக்கள் பயன்படுத்த கூடாது எனவும் கேட்டுகொண்டார்.
இந்நிலையில், திமுக செயல்தலைவர் ஸ்டாலின் இன்று அந்த மேம்பாலத்தை ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தஞ்சாவூர் அருகே புதிதாக கட்டப்பட்ட பாலம் திறக்கும் முன்பெ விரிசல் விட்டதிற்கு காரணம் முறையில்லாமல் கட்டியிருப்பதே எனவும் இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 52 கோடியில் கமிஷன் வாங்கியிருக்கிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும் தெரிவித்தார்.
ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என்பதை அறிய முறையான விசாரணை கமிஷன் தேவை எனவும் அப்போதுதான் உண்மை வெளிவரும் எனவும் குறிப்பிட்டார்.