ராமஜெயம் கொலை வழக்கில் பின்னணியில் யாரோ இயக்குகிறார்கள்... நேரு கிளப்பும் சந்தேகம்!

First Published Nov 8, 2017, 1:56 PM IST
Highlights
somebody behind ramajeyam murder case suspects kn nehru


முன்னாள் அமைச்சரும் திமுகவைச் சேர்ந்தவருமான கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலைவழக்கு நேற்று சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐ., விசாரணைக்கு மாற்றப்படுகிறதுஎன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. 
2012 மார்ச் 23ல் திருச்சி பாலக்கரை பகுதியில் படுகொலை செய்யப்பட்டார் ராமஜெயம். 5 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் இன்னும் இனம் காணப் படாததால், இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடக் கோரி, ராமஜெயத்தின் மனைவி லதா கடந்த 2014ல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.


இந்த வழக்கு விசாரணை பலமுறை ஒத்திவைக்கப்பட்டு நேன்று 21 வது முறையாக விசாரணைக்கு வந்தது. ஒவ்வொரு முறையும் இந்த வழக்கில், குற்றவாளிகளை நெருங்கி விட்டோம் என்று கூறியே அவகாசம் கேட்டுக் கொண்டிருந்தது சிபிசிஐடி. மேலும், இந்த வழக்கில்  12 ரகசிய அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், நேன்றும்  இந்த வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் என்று கூறி, மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரியது சிபிசிஐடி.,
ஆனால்,  சிபிசிஐடி க்கு எத்தனை முறை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறிய 
நீதிபதி பஷீர் அகமது,  கூடுதல் கால அவகாசம் வழங்க மறுத்துவிட்டார். இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், சிபிஐ விசாரணை வேண்டும் என்றும், தங்களுக்கு சிபிசிஐடி மீது நம்பிக்கையில்லை என்றும் கோரிய ராமஜெயத்தின் மனைவி கோரிக்கையை ஏற்று, இந்த வழக்கை சிபிஐ., விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதி, சிபிஐ.,க்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிக்  கொடுக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் இதுவரை கண்டறிந்த தகவல்களை சிபிசிஐடியினர் சிபிஐக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்
இந்நிலையில், ராமஜெயத்தின் கொலை வழக்கில் கே.என்.நேரு ஒரு சந்தேகத்தைக் கிளப்பியுள்ளார். கொலைக் குற்றவாளிகள் குறித்து உள்ளூர் போலீஸாரும், சிபிசிஐடி போலீஸாரும் விசாரித்தனர். அப்போது, விசாரணைக்கு தொய்வு ஏற்படும் வகையில் தனிப்படை போலீஸார் அடிக்கடி மாற்றப்பட்டனர். மேலும், இவ்வழக்கின் விசாரணையை அடுத்த கட்டத்துக்கு நகர விடாமல் யாரோ ஒருவர் தடுத்து வைத்திருந்ததாக  சந்தேகம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளும் யாருக்கோ பயந்து இவ்வழக்கு குறித்த விவரங்களை வெளியில் சொல்லவும் இல்லை. இப்போது, தன்னாட்சி அமைப்பான சிபிஐ விசாரிக்க உள்ளதால்  விரைவில் உண்மை வெளிவரும் என நம்புகிறேன்... என்று  கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். 
சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னரும் இந்த வழக்கு எப்படி நகரப் போகிறது; உண்மைக் குற்றவாளிகள் கண்டறியப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

click me!