பணமதிப்பு நீக்க நடவடிக்கை.. ஓராண்டு நிறைவு..! எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை விடுங்க.. மக்கள் என்ன சொல்றாங்கனு பாருங்க..!

First Published Nov 8, 2017, 1:17 PM IST
Highlights
people opinion about demonetisation


பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பொதுமக்களிடையே எதிர்ப்பை விட ஆதரவு அதிகம் உள்ளதாக ”தி எகனாமிக் டைம்ஸ்” நடத்திய ஆன்லைன் சர்வேயில் தெரியவந்துள்ளது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில், பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட இன்றைய தினத்தை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கறுப்பு தினமாக அனுசரிக்கின்றன.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையால், சிறு, குறு வணிகர்களும் ஏழை, எளிய மக்களும் பாதிக்கப்பட்டனரே தவிர அதனால் எந்த பலனும் ஏற்படவில்லை எனவும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜன் கூட பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்பினார்.

இந்நிலையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறிவிக்கப்பட்டு ஓராண்டு முடிவடைந்ததை ஒட்டி மக்களின் எண்ணங்களை அறிந்துகொள்ளும் வகையில் ”தி எகனாமிக் டைம்ஸ்”, ஆன்லைனில் சர்வே ஒன்று நடத்தப்பட்டுள்ளது. அதில், பெரும்பாலானோர் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

தி எகனாமிக் டைம்ஸ், நடத்திய கருத்துக்கணிப்பில் 10,000 பேர் வாக்களித்தனர். 

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஒட்டுமொத்த பாதிப்பு?

இதில், ஒட்டுமொத்தமாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எப்படி பார்க்கிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, 38% பேர் இந்த திட்டம் வெற்றி அடைந்துள்ளது எனவும், 30% பேர் வெற்றியும் தோல்வியும் கலந்து ஏற்பட்டுள்ளது எனவும், வெறும் 32% பேர் மட்டுமே தோல்வி அடைந்துள்ளது எனவும் கூறி உள்ளனர்.

பொருளாதாரத்தில் இது நீண்ட கால பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என 26% பேர் மட்டும் தெரிவித்துள்ளனர். 32% பேர் பொருளாதாரத்தில் வெளிப்படை தன்மை ஏற்பட்டுள்ளது எனவும், 42% பேர், சில பாதிப்புக்களை ஏற்படுத்தி இருந்தாலும் அதிக வெளிப்படை தன்மை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

வேலைவாய்ப்பில் பாதிப்பா?

வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என 23% பேர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பில் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அது குறுகிய கால பாதிப்பே என 45% பேரும், பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை என 32% பேரும் தெரிவித்துள்ளனர். 

இதன்மூலம் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிர்ப்பை விட மக்கள் மத்தியில் ஆதரவு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது.

click me!