
மன்னவனேயாயினும் குற்றம் குற்றமே என்று நிரூபித்து அதற்கான தண்டனையை தந்தவள் கண்ணகி. தமிழ் பெண்களின் நெஞ்சுரத்தை சொல்லும் காவிய நாயகி அவள். அப்பேர்ப்பட்ட கண்ணகிக்கு சென்னையிலிருந்த சிலையை, கடந்த சில முறைகளுக்கு முன் முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா படுத்தி எடுத்தது நினைவிருக்கலாம்.
கோவலனும், பாண்டிய மன்னனும் கண்ணகிக்கு செய்ததை விட இது கொடூரமானது என்று மேடைக்கு மேடை தி.மு.க. பேச்ச்சாளர்கள் வெளுத்து கட்டினர். கண்ணகி சிலை மீது ஜெ., கோபம் கொள்ள காரணம், கண்ணகி எனும் கதாபாத்திரம் ‘பூம்புகார்’ திரைப்படம் வாயிலாக கலைஞருக்கு பெரும் பெயர் ஈட்டித்தந்ததே என்று சாராரும், இல்லையில்லை கடற்கரையில் கண்ணகி நிற்கும் நிலை தனது ஆட்சிக்கு இக்கட்டை தரும் என்று ஜோசியர்கள் சொன்னதன் விளைவே என்று மற்றொரு சாராரும் அந்த வில்லங்கத்துக்கு விளக்கம் கொடுத்தனர்.
இப்படி ஒரு காலத்தில் ஜெ.,வை சர்ச்சை நாயகியாக சித்தரிக்க வைத்த உபகரணம்தான் கண்ணகி சிலை. ஜெ., உயிரோடு இருந்த காலத்தில் அவரது பேச்சை மீறுவதாக கனவு கண்டாலும் கூட எழுந்து உட்கார்ந்து கன்னத்தில் போட்டுக் கொண்டு அதையும் வீடியோ எடுத்து நமது எம்.ஜி.ஆரில் ‘கழக நிரந்தரபொதுச்செயலாளர் மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைகளை உயிரென பாவிப்பேன் என்று ....
கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழக .....துறை அமைச்சருமான .... அவர்கள் நள்ளிரவில் தனது கன்னத்தில் போட்டுக் கொண்ட காட்சி.” என்று ஜெயா டிவியில் ஒளிபரப்ப வைத்து பணிவு காட்டுவதுதான் அ.தி.மு.க. அமைச்சர்களின் வழக்கம்.
ஆனால் இப்போது அவர் இல்லாத நிலையில் விசுவாசம் புளியமரத்து வவ்வாலாக தலைகீழாக தொங்குவதை பாருங்கள்.
இன்று (10_05_2017) புதன்கிழமையன்று காலையில் தமிழக அரசின் சார்பில் சித்திரைத் திங்கள் முழு நிலவு நாளினை முன்னிட்டு, கண்ணகி சிலைக்கு அருகில் புகைப்படம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தும் காட்சி நிகழ்கிறது.
அப்படி மரியாதை செலுத்துபவர்கள் மாண்புமிகு அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்களாம்.
அது சரி! கண்ணகி சிலைக்கு அன்று டார்ச்சர் கொடுக்கப்பட்டப்போதே சிலர் ‘தமிழ் பாரம்பரிய நாயகியை இப்படி அவமதிப்பதற்கான தண்டனை நிச்சயம் உண்டு.’ என்று...
ஆக அந்த ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டுகிறது போல!