
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அரசியலுக்கு வருவதற்கு முன்பே சினிமாவின் மூலம் சம்பாதித்த பணத்தை சொத்துக்களாக வாங்கி வைத்திருந்தார்.
போயஸ் கார்டன் இல்லம், ஹைதராபாத் திராட்சை தோட்டம் போன்றவை அதில் குறிப்பிட தக்கவை. அதற்கு பின்னரும் கொடநாடு எஸ்டேட் உள்ளிட்ட சொத்துக்கள் அவரிடம் இருந்தது.
அவர் மறைந்த பிறகு, அவரது சொத்துக்கள் குறித்து ஏதாவது உயில் எழுதி வைத்திருக்கிறாரா? அப்படி என்றால், அந்த உயில் யாரிடம் இருக்கிறது என்ற கேள்விகள் எழுந்த வண்ணம் உள்ளது.
மேலும், சொத்து குவிப்பு வழக்கில், அவருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை, அவருடைய சொத்துக்களை விற்று அல்லது ஏலம் விட்டு நீதி மன்றத்திற்கு செலுத்த வேண்டும் என்று, கர்நாடக அரசின் சார்பில், உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஆனாலும், அவர் உயில் எழுதி வைத்திருக்கிறாரா? அவரது உயில் யாரிடம் இருக்கிறது? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும், ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போதே, உயில் எழுதியதாகவும், அதை தமக்கு நெருக்கமான வழக்கறிஞரிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும், அவர் அந்த உயிலை பிரதமர் மோடியிடம் கொடுத்து வைத்துள்ளதாகவும் ஒரு தகவல் வெளியானது.
ஆனால், அந்த தகவல்கள் எதுவும் இதுவரை உறுதிப்படுத்த படவில்லை. இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகனான தீபக், ஜெயலலிதாவின் உயில் தம்மிடம் உள்ளதாகவும், அதில் அவருடைய சொத்துக்கள், தமது பெயரிலும், தமது சகோதரி தீபா பெயரிலும் எழுதி வைத்துள்ளதாகவும் கூறி வருவதாக தகவல்.
அதன்படி, சென்னை போயஸ் கார்டன் பங்களா, சென்னை பார்சன் காம்ப்ளக்சில் உள்ள இரண்டு கட்டடங்கள், சென்னை செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள ஜெயலலிதா வீடு, கொடநாடு எஸ்டேட், ஹைதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம் உள்ளிட்ட எட்டு சொத்துகள் தமக்கு சொந்தம் என்று தீபக் கூறியதாக சொல்லப்படுகிறது.
ஜெயலலிதா உயில் எழுதவில்லை என்றாலும், அவருடைய ரத்த சொந்தம் என்ற அடிப்படையில், அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோரே சட்டபூர்வமான வாரிசுகள் என்ற முறையில், சொத்துக்களை உரிமை கோர முடியும்.
ஆனால், ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரையில், போயஸ் கார்டன் பக்கம், தீபாவையோ, தீபக்கையோ அவர் அனுமதிக்காத நிலையில், தீபக்கிடம் ஜெயலலிதாவின் உயில் எப்படி வந்தது? என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே, அந்த உயில் உண்மைதானா? என்ற சந்தேகமும் வலுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.