தேர்தல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும், குழு அமைக்கும் வரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல்- முறைகேடு புகார்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட 77 பேர் வேட்பாளர்களாக களம் இறங்குகின்றனர். இந்த தேர்தலில் வாக்குகளை கவர வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்கப்படுவதாக அதிமுக மற்றும் பாஜக சார்பாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும் வாக்காளர்களை அடைத்து வைத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இந்தநிலையில், கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஒவ்வொரு தேர்தலின்போதும் பணம் கொடுத்து வாக்காளர்கள் விலைக்கு வாங்கப்படுவதாக தெரிவித்தார்.
தள்ளுபடி செய்து உத்தரவு
மேலும் முறைகேடுகள் புகார்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய முறையில் விசாரணை நடத்துவது இல்லையென்றும் பணம் கொடுப்பவர்கள், வாங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றங்கள் பலமுறை அறிவுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். எனவே தேர்தல் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும், குழு அமைக்கும் வரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு நிறுத்த வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே மற்றொரு வழக்கில் இது சம்பந்தமான நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.
இதையும் படியுங்கள்
ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி யாருக்கு.? தபால் வாக்கை பதிவு செய்த காவல்துறையினர்