
தமிழக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவியில் பழங்குடியினருக்கு முறையான இட ஒதுக்கீடு கோரி திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், ‘உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு அவசர கதியிலும், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளை பின்பற்றாமலும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அறிவிப்பாணையை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.
இதுகுறித்த வழக்கு தற்போது வரை நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், மானிய கோரிக்கைகள் பற்றிய விவாதங்கள் குறித்த தமிழக சட்டப்பேரவை 5 வது நாளாக இன்று தொடங்கியது.
இதில், உள்ளாட்சி தேர்தல் குறித்து திமுக சார்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது, உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு தயாராக உள்ளதாகவும் தேர்தல் நடத்தக்கூடாது என யார் வழக்கு தொடர்ந்தது என்றும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் கூறிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், வழக்கு தொடுத்தது தேர்தலை நிறுத்த அல்ல என்றும் இடஒதுக்கீட்டை சரியாக பின்பற்றத்தான் என்றும் கூறினார்.
மேலும், தேர்தல் நியாயமாக நடக்க வேண்டும் என்பதற்காக தான் திமுக வழக்கு தொடுத்தது என்றும் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தியதற்கும், திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ஸ்டாலின் பதில் அளித்தார்.