
அ.தி.மு.க.வில் இருந்து அமைச்சர்களால் ஒதுக்கி வைக்கப்பட்ட தினகரன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திகார் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையானார்.
என்னை யாரும் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முடியாது என்று கூறிய தினகரன் மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபடுவேன் என்றும் அதிரடியாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து பெசன்ட்நகரில் உள்ள தனது வீட்டில் வைத்து தினமும் ஆதரவாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சி அலுவலகத்துக்கு செல்லாமலேயே தனது ஆதரவாளர்களை சந்திக்கம் டிடிவி.தினகரன் கட்சி பணிகளில் வேகம் காட்டவில்லை.
கட்சி நிகழ்ச்சிகளில் தினகரனை முன்னிறுத்த வேண்டும், ஆட்சியை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தினகரன் ஆதரவாளர்கள் பேசினர். ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை.
திகார் சிறையில் இருந்து வெளிவந்தவுடன் நிருபர்களை சந்தித்த தினகரன் அதன் பின்னர் அமைதியாகவே இருக்கிறார். பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்த டிடிவி.தினகரன், எடப்பாடி மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றி கூறியுள்ளார்.
அதற்கு, 60 நாட்களுக்கு பொறுமையாக இருக்கும்படி சசிகலாக கூறியதாகவும், அதன் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்ததாகவும் தெரிகிறது. இதன் பின்னர் சென்னையில் தனது ஆதரவாளர்களை திரட்டி, டிடிவி.தினகரன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.