அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிர்ப்பு..! ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி புதிய உத்தரவு

By Ajmal Khan  |  First Published Mar 29, 2023, 1:38 PM IST

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நாளை விசாரிக்க உள்ளது.


அதிமுக அதிகார மோதல்

அதிமுகவில் அதிகார போட்டி ஏற்பட்ட நிலையில், ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து கட்சியில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். மேலும் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தநிலையிலை அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மனு தாக்கல் செய்தது. இதில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்த தீர்ப்பில்,  கட்சி விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ள போதும், கட்சியின் அடிப்படை கட்டமைப்புக்கு மாறாக திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும்,

Latest Videos

எந்த அதிகாரமும் இல்லாமல் ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்பட்டதால் தீர்மானங்கள் அடிப்படை முகாந்திரம் அற்றவை பன்னீர்செல்வம் தரப்பினர்  முன் வைத்த வாதங்களை ஏற்க முடியாது. ஏனென்றால் ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், 2 ஆயிரத்து 460 உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக் கூடியவையே என தெரிவித்து ஓபிஎஸ் தரப்பு மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். 

விசாரணைக்கு நாளை பட்டியலிட உத்தரவு

இதனையடுத்து அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்கவும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க மறுத்து தனி நீதிபதி குமரேஷ் பாபு அளித்த தீர்ப்பை எதிர்த்து பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேரும் மேல் முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர். இதில் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்திருந்த மனு மட்டும் இன்று விசாரணைக்கு வந்தது. தனி நீதிபதி உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல் முறையீட்டு மனுவை நாளை விசாரணைக்கு பட்டியலிட  நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். முன்னதாக மற்ற மூவரின் மனுக்கள் பட்டியலிடப்படவில்லை என்றும் அவற்றை சேர்த்து பிற்பகல் விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், மனுக்கள் எண்ணிடப்பட்டால் விசாரணைக்கு பட்டியலிடப்படும் எனத் தெரிவித்தனர். மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோரின் மனுக்கள் நாளை பட்டியலிடப்பட்டு விசாரணை நடத்தப்படவுள்ளது.

இதையும் படியுங்கள்

ஓபிஎஸ்க்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை ஒதுக்க கூடாது..! இறங்கிய அடிக்கும் இபிஎஸ் அணி
 

click me!