இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை ‘‘விபச்சார விடுதி’’ என்று பதிவிட்ட விவகாரம்..! எரிமலையாய் வெடித்த வைகோ.

By Ezhilarasan BabuFirst Published Jul 20, 2020, 10:56 AM IST
Highlights

இதில் மெல்ல மெல்ல புகுந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினர், கடந்த ஒரு வாரமாக தங்கள் காவி கழிசடைப் பதிவுகளை அந்தக் குழுவில் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை‘‘விபச்சார விடுதி’’ என்று பதிவிடுவதா என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த 95 ஆண்டுகளாக நாட்டின் விடுதலைக்கும், பின்னர் நாட்டின் பாதுகாப்பிற்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் அரசமைப்புச் சட்ட வழியில் நின்று செயல்பட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள மூத்த அரசியல் கட்சி ஆகும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம், (பாலன் இல்லம்) சென்னை மாநகர், தியாகராயர் நகரில் உள்ள செவாலியே சிவாஜி கணேசன் சாலையில் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகின்றது. குஜிலியம்பாறை ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள் நடத்திவந்த முகநூல் பக்கம் “கம்யூனிசம் வென்றே தீரும்... மார்க்சியவழியில்...” என்பதாகும். 

இதில் மெல்ல மெல்ல புகுந்த ஆர்.எஸ்.எஸ். கூட்டத்தினர், கடந்த ஒரு வாரமாக தங்கள் காவி கழிசடைப் பதிவுகளை அந்தக் குழுவில் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளனர்.அதில், பாலன் இல்லம் படத்தைப் போட்டு, ‘விபச்சார விடுதி’ என்று ஆபாச வார்த்தையை பதிவிட்டும், இடதுசாரி சிந்தனையாளரும், பெண்ணுரிமைச் செயல்பாட்டாளருமான தோழர் ஒருவர் தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை தவறான நோக்கத்துடனும், அவதூறாகவும் விஸ்வா.எஸ் என்பவர் பதிவிட்டுள்ளனர்.இதுகுறித்து ஜூலை 17 ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டும், காவல்துறையினர் இதுவரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் பின்னணி என்ன? இந்தப் போக்கு நீடிப்பது நல்லதல்ல. இந்த மோசமான குற்றச்செயல் ஒருவரால் மட்டும் செய்யப்படக் கூடியது அல்ல. 

மதவெறி, சாதி வெறி மூலம் சமூக அமைதியை சீர்குலைக்கும் சதிகாரக் கும்பல்கள்தான் இதுபோன்ற செயல்களைத் தொடர்ந்து செய்து வருகிறன.ஆட்சி அதிகாரம் தங்களுக்கு அரவணைப்பாக இருக்கும் ஒரே காரணத்தால், எந்த எல்லைக்கும் சென்று வெறியாட்டம் போடலாம், கொச்சைப்படுத்தலாம் என்ற போக்கில் மதவாத சக்திகள்  கண்மூடித்தனமாக ஈடுபட்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் கட்சிகள், சமூக நல இயக்கங்கள் மற்றும் மக்கள் தொண்டு ஆற்றுவோரை முகநூல், ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தொடர்ந்து இழிவுபடுத்துவோரை நுண்பிரிவு காவல்துறையினர் கைது செய்து, சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். என அதில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!