கந்தனின் பெயரை ஒருமுறையாவது உச்சரித்து ஸ்டாலின் கருப்பர் கூட்டத்தை கண்டிக்க வேண்டும்..!! அமைச்சர் கோரிக்கை.!!

By Ezhilarasan BabuFirst Published Jul 20, 2020, 10:32 AM IST
Highlights

தமிழர் கடவுள் முருகர் பெயரை அவரது வாயால் அல்லது அறிக்கையால் உச்சரித்து அவரை நிந்தனை செய்தோரை எச்சரித்து அவரது கண்டனங்களை உடனடியாக அவர் தெரிவிக்க வேண்டும். 

தமிழர் கடவுள் முருகர் பெயரை திரு ஸ்டாலின் அவரது வாயால் உச்சரித்து முருகரை நிந்தனை செய்தோரை எச்சரித்து தன்னுடைய கண்டனங்களை உடனடியாக அவர் தெரிவிக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி வேலுமணி வலியுறுத்தியுள்ளார்.  தனது டிவிட்டர் வாயிலாக ஸடாலினுக்கு இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது டிவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது, முத்தமிழ் வித்தகர் என்று அறியப்பட்டவரின் மகனாக இருக்கும் திரு.மு.க ஸ்டாலின் தமிழர்களின் முழுமுதற் கடவுளாக உலகமெங்கும் உள்ள தமிழர்கள் பலரால் வணங்கப்படும் கந்தரை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்தை கண்டித்து இதுவரை மூச்சுக்கூட விடாதது ஏன்? 

உலகெங்கும் வாழும்  முருக பக்தர்கள் மட்டுமல்லாது சமய நல்லிணக்கத்தை விரும்பும் அனைத்து தரப்பினரது  பெருங்கோபத்தையும் கண்டு அஞ்சி, அதனை  மடைமாற்றி திசைதிருப்ப கோவையில் உள்ள கோவில்கள் பக்கம் தன்னுடைய அரசியல் நாடகப் பார்வையை செலுத்தியிருப்பது கந்தரை நிந்தை செய்தோரை விஞ்சும் விந்தையான செயல்.மனதார உண்மையான மதசார்பின்மையை கடைபிடிப்பவராக திரு.ஸ்டாலின் இருப்பாரேயானால் முதலில் கோடிக்கணக்கான தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்திய குற்றவாளிகள் மீது மாண்புமிகு தமிழக முதல்வர் தலைமையிலான அரசு கடும் நடவடிக்கை எடுத்திருக்கும் பட்சத்தில் 

சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தி தமிழர் கடவுள் முருகர் பெயரை அவரது வாயால் அல்லது அறிக்கையால் உச்சரித்து அவரை நிந்தனை செய்தோரை எச்சரித்து அவரது கண்டனங்களை உடனடியாக அவர் தெரிவிக்க வேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின் பேரில் சமய நல்லிணக்கத்தை சீர்குலைத்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோர் மீது தமிழக அரசு தகுந்த நடவடிக்கைகளை தவறாது உடனடியாக எடுத்து வருகிறது.அந்த வகையில் கோவையில் மூன்று இடங்களில் உள்ள கோவில்களில் சேதம் ஏற்படுத்தப்படிருப்பது   தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் தொடரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

click me!