
பாஜகவை விட்டு விலகுவதாக வரும் தகவல் அவதூறானது எனவும் உயிர் இருக்கும் வரை பாஜகவில்தான் இருப்பேன் எனவும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எப்படியாவது காலூன்றிவிட வேண்டும் என்று பாஜக குட்டிக்கரணம் அடித்துவரும் நிலையில். அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா, நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் பொது வெளிகளில் பேசும் பேச்சுக்கள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இதையடுத்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்ட சிலர் பாஜகவுக்கு முழுக்குபோட தயாராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மைக்காலமாக பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா, நடிகர் எஸ்.வி.சேகர் போன்றோர் தமிழகத்தில் மதவாதத்தைத் தூண்டும் வகையில் அநாகரீகமாகவும், அவமானப்படுத்தும் வகையிலும் மிக மோசமாக பேசி வருகிறார்கள்.
கவிஞர் வைரமுத்து விவகாரம், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்தாய் வாழ்த்துக்கு மரியாதை அளிக்காதது போன்ற பிரச்சனைகளில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை பெரிதாக கருத்து எதுவும் சொல்லாமல் பட்டும் படாமலேயே பேசி வருகிறார்.
தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர் சற்று அடங்கி வாசித்தாலும் இவர்களின் பேச்சு, தமிழகத்தில் பாஜக முற்றிலும் காலூன்ற முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் எச்.ராஜா, எஸ்.விசேகர் போன்றோரை பாஜக மேலிடமும் அடக்கி வைக்காமல் வேடிக்கை பார்த்து வருவது தமிழிசை போன்ற மிவாத தலைவர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.
இந்நிலையில்தான் தமிழக பாஜக தலைவர் தமிழிசை விரைவில் தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு எச்.ராஜா, எஸ்வி.சேகர் போன்றோர் மீதான அதிருப்தியே என கூறப்பட்டது.
இந்நிலையில்பாஜகவை விட்டு விலகுவதாக வரும் தகவல் அவதூறானது எனவும் உயிர் இருக்கும் வரை பாஜகவில்தான் இருப்பேன் எனவும் தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.