நகராட்சி கூட்டத்தை கட் அடித்து விட்டு நெஞ்சுக்கு நீதி படத்திற்கு சென்ற தலைவர்.! அதிமுக கவுன்சிலர்கள் அதிர்ச்சி

By Ajmal KhanFirst Published May 25, 2022, 8:50 AM IST
Highlights

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில், நகராட்சி கூட்டத்தை நடத்தாமல் திரையரங்கிற்கு நகராட்சி தலைவர் படம் பார்க்க சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

உதயநிதியின் நெஞ்சுக்கு நீதி

இயக்குனர்  அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், தமிழக முதலமைச்சர் மு.க.  ஸ்டாலினின் மகனும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் மே 20ஆம் தேதி  தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில் வெளியானது. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளிவரும் முதல் திரைப்படம் என்பதால் இப்படம் திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.தமிழகத்தில் பல இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்து ரசிகர்கள்  கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் திரைப்படத்தை திரையரங்கில் பார்த்து புகைப்படத்தையும் வெளியிட்டனர். பல இடங்களில் சட்டமன்ற உறுப்பினர்கள் விழாவாகவே கொண்டாடினர். திரையரங்கில் கேக் வெட்டியும் இலவசமாக டிக்கெட் கொடுத்தும் கொண்டாடினர்

நகராட்சி கூட்டத்திற்கு கட்

இந்தநிலையில், நேற்று பெரம்பலுார் நகராட்சி கவுன்சில் கூட்டம்   தலைவர் அம்பிகா தலைமையில் நேற்று காலை 11:00 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த கூட்டத்தை  நடத்தாமல், நகராட்சி தலைவர், துணை தலைவர் ஆகியோர் சினிமா பார்க்கச் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காலை 11:30 மணியாகியும், நகராட்சி தலைவர் அம்பிகா, துணைத் தலைவர் ஹரிபாஸ்கர் கூட்ட அரங்கத்துக்கு வரவில்லை இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக கவுன்சிலர்கள் நகராட்சி தலைவர் எங்கே என கேள்வி எழுப்பினர்.

அதிமுக கவுன்சிலர்கள் அதிர்ச்சி

அப்போது முன்னாள் அமைச்சர் ஆ.ராசா தலைமையில், நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் உள்ளிட்ட திமுகவினர், பெரம்பலூர் ராஜா சினிமா தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும், உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி படத்திற்கு சென்றது தெரியவந்தது.  இதனால், திமுக,  சுயேட்சை மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக கவுன்சிலர்கள் அப்செட் ஆனார்கள். கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து விட்டு மக்கள் பணி குறித்து விவாதிக்காமல், காலை 11 மணி காட்சிக்கு  படத்திற்கு தியேட்டருக்கு சென்றதை கண்டித்தும் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த தகவல், நகராட்சி அலுவலர்கள் மூலம், நகராட்சி தலைவர், துணை தலைவர் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவசரமாக நகராட்சி கூட்ட அரங்கத்துக்கு நகராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் சென்றனர். ஆனால். அங்கு யாரும் இல்லாத காரணத்தால்  அதிர்ச்சி அடைந்த நகராட்சி தலைவர் மற்ற கவுன்சிலருக்கு போனில் தகவல் தெரிவித்து மீண்டும் வரவழைத்தனர். இதனையடுத்து ஒரு மணி நேரம் தாமதமாக, பகல் 12:00 மணிக்கு நகராட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!