ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது ஷின்ஷோ அபேவுக்கு தமிழகத்தின் பெருமையான திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் தயாரிக்கப்படும் பாயைப் பரிசாக வழங்கினார்.
தமிழகத்தில் புகழ் பெற்ற பத்தமடை பாயை ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி பரிசாக அளித்துள்ளார்.
அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பானுக்கு சென்றுள்ளார். இந்த குவாட் அமைப்பு என்பது ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபே மூலம் கடந்த 2007-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஆனால், சரிவர செயல்படாத இந்த அமைப்பு, 2017-ஆம் ஆண்டில் மீண்டும் ஏற்படுத்தப்பட்டது. கரோனா தொற்றால் தடைப்பட்டிருந்த குவாட் அமைப்பின் உச்சி மாநாடு தற்போது நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமரும் ஜப்பானுக்கு சென்றுள்ளனர்.
இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவருக்கு இந்திய கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பொருளை பரிசாக அளித்தார். இதேபோல் ஆஸ்திரேலிய பிரதமருக்கும் மோடி பரிசளித்தார். இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஷோ அபேவை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது ஷின்ஷோ அபேவுக்கு தமிழகத்தின் பெருமையான திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் தயாரிக்கப்படும் பாயைப் பரிசாக வழங்கினார். திருநெல்வேலியில் சிறிய நகரான பத்தமடை, பாய் தயாரிப்புக்கு பிரபலமாக விளங்கி வருகிறது.
தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வளரும் கோரை புல்லில் இருந்து பத்தமடை பாய் தயாரிக்கப்படுகிறது. கோரையுடன் சில்க் அல்லது பருத்தியைப் பயன்படுத்தி கைத்தறி மூலமாக இந்தப் பாய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பாய்க்கு தனித்துவமிக்கதாக இருக்கும் பத்தமடை பாய்கள் தென் இந்தியாவைத் தாண்டி வட இந்தியாவிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் பத்தமடை பாயை ஜப்பான் முன்னாள் பிரதமர் அபேவுக்கு பிரதமர் மோடி பரிசாக அளித்துள்ளதன் மூலம் தமிழகத்தின் பெருமையை ஜப்பானுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறார்.