சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் ஆய்வு பணிக்கு சென்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் லிப்டில் சிக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவசரகால கதவு வழியாக ஊழியர்கள் அமைச்சரை மீட்டனர்.
மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று, இந்தியாவிலேயே முதன் முறையாக கை அறுவை சிகிச்சை உயர் சிறப்பு மேற்படிப்பு (MCH), white coat ceremony மற்றும் பல்வேறு மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். இதனை தொடர்ந்து கை அறுவை சிகிச்சை சிறப்பு பிரிவை பார்வையிட்டு விட்டு, 3ஆவது தளத்தில் இருந்து தரைத்தளத்திற்கு செல்ல லிப்டில் ஏறினார். அப்போது அமைச்சருடன் மருத்துவர்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இருந்தனர்.
லிப்டில் சிக்கிய அமைச்சர்
இந்தநிலையில் திடீரென லிப்ட் பாதியில் நின்றுவிட்டது. இதனால் லிப்ட்டிக்குள் சிக்கியிருந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகள் செய்வதறியாமல் திகைத்து நின்றனர். இதனையடுத்து லிப்ட் ஆப்ரேட்டர் லிப்ட்டை சரிசெய்ய முயன்றார். இருந்த போதும் நேரம் ஆனதால் பாதியில் நின்ற லிப்ட் கதவு திறக்கப்பட்டு அவசரகால வழியாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் மருத்துவர்கள் மீட்டக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் ஸ்டான்லி மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்
மீண்டும் இலங்கை கடற்படை அடாவடி..! 5 படகுகளோடு தமிழக மீனவர்கள் 24 பேர் கைது..!