சமூக வலைதளங்களில் திமுக அரசுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதாக பாஜக ஆதரவாளர் உமா கார்க்கிக்கு மாநில தலைவர் அண்ணாமலை நேற்று விருது வழங்கி பாராட்டிய நிலையில், தொடர்ந்து அவதூறு கருத்துகளை பதிவிட்டதாக இன்று கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருது கொடுத்த அண்ணாமலை
கோவை சிங்காநல்லூர் சிவா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் உமா கார்த்திகேயன். இவர் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் உமா கார்க்கி என்ற பெயரில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றார். நேற்று மாலை பாஜக சார்பில் மக்கள் சந்திப்பு பேரியக்கம் மற்றும் சமூக ஊடக செயல் வீரர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உமா கார்கிக்கு சிறந்த செயல்பாட்டாளர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விருது வழங்கி பாராட்டியிருந்தார்.
இந்நிலையில் உமா கார்க்கி இரு மதங்களுக்கு இடையே மோதல் ஏற்படுத்தும் விதமாகவும், திமுக தலைவர்கள் கருணாநிதி, ஸ்டாலின், திமுக அமைச்சர்கள் குறித்தும் டிவிட்டரில் அவதூறு கருத்துகளை உமா கார்க்கி என்பவர் பரப்பி வருவதாக தொடர்ந்து திமுகவினர் சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.
கைது செய்த போலீஸ்
இதனையடுத்து கோவை சைபர்கிரைம் போலீசார் உமா கார்க்கியை இன்று காலை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். இந்த தகவல் அறிந்த பாஜக நிர்வாகிகள், கோவை சைபர் கிரைம் அலுவலகத்திற்கு வந்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய, பா.ஜ.க கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, பாஜக ஆதரவாளரான உமா கார்த்திகேயனை காவல்துறையினர் கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.நேற்று மாலை நாங்கள் சமூக வலைதளத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக அவருக்கு விருது கொடுத்திருக்கிறோம் எனவும், இதை தாங்க முடியாமல் பொய் வழக்கு போட்டு கைது செய்து இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். கலைஞரைப் பற்றியோ , பெரியாரைப் பற்றியோ பேசியது பொய் என்றால் அதை திமுகவினர் நிரூபிக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.
காவல்நிலையத்தில் பாஜகவினர்
உமா கார்க்கி கைது செய்யப்பட்டதையடுத்து திமுகவினரும் சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது கோவை வடக்கு திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ் கூறுகையில், இந்தியாவில் இந்துக்களுக்கு மட்டும் ஓட்டு இருக்க வேண்டும், மற்றவர்களுக்கு ஓட்டுரிமை ரத்து செய்ய வேண்டும் எனவும் உமா கார்க்கி பதிவிட்டு இருக்கிறார் எனவும் தெரிவித்தார். மேலும் பாஜகவினர் மூலமாக மணிப்பூரை போல தமிழகத்திலும் கலவரத்தை ஏற்படுத்த திட்டமிடுவதாகவும் குற்றம்சாட்டினார். இந்தநிலையில் காவல்நிலையத்தில் திமுக மற்றும் பாஜகவினர் ஒரே நேரத்தில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படியுங்கள்
சாலை வரியை உயர்த்துவதால் உயரும் பைக், கார் விலை..! மக்களின் கனவிற்கு தடை போடும் திமுக- இபிஎஸ் ஆவேசம்