25 ஆண்டுகள் கழித்து திமுக செய்த சம்பவம்... தனி மெஜாரிட்டியுடன் தனி ஆவர்த்தனம்..!

By Asianet TamilFirst Published May 3, 2021, 3:56 PM IST
Highlights

தமிழகத்தில் 25 ஆண்டுகள் கழித்து அறுதி பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்க உள்ளது.
 

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 234  தொகுதிகளில் திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க 118 இடங்களே போதும் என்ற நிலையில், திமுக மட்டுமே தனித்து 126 தொகுதிகளில் வெற்றி பெற்றது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 4 மதிமுக, 2 மனிதநேய மக்கள் கட்சி, 1 தமிழக வாழ்வுரிமை கட்சி, 1 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியோரும் திமுக உறுப்பினர்களாகவே சட்டப்பேரவையில் கருதப்படுவார்கள். எனவே சட்டப்பேரவையில் திமுகவின் பலம் 134 ஆக இருக்கும். இதன்மூலம் திமுக தமிழகத்தில் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது.
மேலும் 25 ஆண்டுகள் கழித்து திமுக தனி மெஜாரிட்டியுடன் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறது. கடந்த 1996-ம் ஆண்டு தேர்தலில் திமுக மட்டும் 173 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றபோதும், திமுக மட்டும் தனியாக அறுதி பெரும்பான்மை பெறவில்லை. அப்போது 96 தொகுதிகளில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சியின் முழு ஆதரவுடன்தான் 5 ஆண்டுகால ஆட்சியைத் திமுக நிறைவு செய்தது. இதனாலேயே அன்றையை அரசை ‘மைனாரிட்டி திமுக அரசு’ என்று ஐந்து ஆண்டு காலமும் ஜெயலலிதா விமர்சித்து பேசினார். 
அதன்பிறகு இப்போதுதான் திமுக ஆட்சியைப் பிடித்திருக்கிறது. அதுவும் தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 25 ஆண்டுகள் கழித்து திமுக தனி பெருபான்மையுடன் தமிழகத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. 

click me!