
கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பாஜகவைத்தான் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பார் என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கர்நாடாகவில் கடந்த 12 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மாநிலம் முழுவதும் 40 மையங்களில் நேற்று நடைபெற்றது. தொடக்கத்தில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. அதன்பின் காங்கிரஸை பின்னுக்கு தள்ளி பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்தது. பின் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தைவிட பாஜக முன்னிலை வகித்தது.
இந்த நிலையில், பா.ஜ.க 112 தொகுதில் வென்றால்தான் தனிப்பெரும்பாண்மை கிடைக்கும். தற்போது பா.ஜ.க 104 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. இதனால் கர்நாடகத்தில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் 78 இடங்களையு, மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களையும், சுயேட்சை 3 இடத்தையும் பெற்றுள்ளன.
சுயேட்சை கட்சிகள் தன்னுடன் இருக்க அவர்களுடன் பேசி உடன்படுத்திக் கொண்டார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தியது. மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைமையில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஒத்துழைக்கும் என்று அறிவித்தது.
இந்த நிலையில், பாஜக ஆட்சி அமைக்க உரிமைக்கோரி ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தளம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ராஜா வெங்கடப்பா நாயக்கா, வெங்கடராவ் நாதகவுடா எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர்கள் கூட்டாக சென்று ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளனர்.
காங்கிரஸ் + மஜத மற்றும் பாஜக ஆகிய கட்சிகளில் யாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்பது பெரும் எதிர்பார்புக்கு உள்ளாகி இருக்கிறது. இந்த நிலையில் பாஜகவின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி, தனது டுவிட்டர் பக்கத்தில் எடியூரப்பாவைத்தான் முதலில் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்று பதிவிட்டுள்ளார்.