
கர்நாடகாவில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது பாஜக. இதனால் அம்மாநில அரசியலில் திக் திக் நிமிடங்கள் தொடருகிறது.
பிஜேபி 104 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 38 இடங்களிலும், சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். கர்நாடகாவில் தேர்தல் நடந்த 222 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை. ஆனால் எந்த கட்சியாலும் மெஜாரிட்டி இடங்களை பெற முடியவில்லை. எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காத நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திரபிரதான், நட்டா ஆகியோர் களத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், மல்லேஸ்வரத்தில் இன்று நடைபெற்ற பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எடியூரப்பாவை பாஜக எம்எல்ஏக்கள் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் கையெழுத்துடன் கூடிய கடிதத்துடன், ஆளுநரை ராஜ்பவனில் எடியூரப்பா, ஈஸ்வரப்பா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சந்தித்தனர். காலை 11.15 மணிக்கு இந்த சந்திப்பு ஆரம்பித்தது.
நேற்று மாலையில் எடியூரப்பா ஆளுநரை சந்தித்து, பாஜகவை ஆட்சியமைக்க கோரிக்கைவிடுத்த நிலையில், இப்போது எம்எல்ஏக்கள் கடிதத்துடன் சென்று மீண்டும் அதை வலியுறுத்தியுள்ளார். இதனிடையே, கர்நாடக பிரஞ்யாவந்த ஜனதா கட்சி (கேபிஜேபி) என்ற சிறு கட்சி சார்பில் ராணிபென்னூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சங்கர், பாஜகவுக்கு ஆதரவு அளிக்க முன் வந்துள்ளதால் பாஜக ஆதரவு எம்எல்ஏக்கள் பலம் 105ஆக உயர்ந்துள்ளது.
எடியூரப்பா ஆளுநர் வஜூபாய் வாலாவை சந்தித்து பா.ஜ.க. ஆட்சியமைக்க உரிமைகோரியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி நடத்திய சட்டமன்றக் குழு கூட்டத்தில் 12 எம்.எல்.ஏக்கள் பங்கேற்க்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதே போல மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் ராஜ வெங்கடப்பா நாயகா, வெங்கட ராவ் நாதகவுடா கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தனிபெரும் கட்சியாக உள்ளதால் பாஜகவைதான் ஆளுநர் அழைப்பார் என பாஜக தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பதைப் பார்த்தால் பாஜக தனது வேலையை அரப்பித்துள்ளது அப்பட்டமாக தெரிகிறது.