
தற்போதுள்ள சாலையை விரிவுபடுத்துவதை விடுத்து, மக்கள் எதிர்க்கும் 8 வழிச்சாலையை அமைக்கும் திட்டத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்கக் கூடாது என்று தங்க தமிழ்செல்வன் கூறியுள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்செல்வன் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
சேலத்தில் ஏற்கெனவே மத்திய சாலைகள் 2, மாநில சாலைகள் 2 என மொத்தம் 4 சாலைகள் உள்ளன. அந்த சாலைகளில் 2 வழிச் சாலையை 4 வழிச்
சாலையாகவோ, 4 வழிச் சாலையை 8 வழிச் சாலையாகவோ மாற்றலாம். இல்லாவிட்டால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள சாலையை 8 வழி
சாலையாக மாற்றலாம் என்றார்.
2 லட்சம் மரங்கள், 10 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் என விவசாயிகளைப் பாதிக்கும் சாலை திட்டத்தை நடைமுறைப்படுத்துவது சரியில்லை. 1 ஏக்கர், 2 ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் நிலத்தை இழந்துவிட்டு என்ன செய்வார்கள்? என்று கேள்வி எழுப்பிய தங்க தமிழ்செல்வன், மக்கள் எதிர்க்கும் இந்த திட்டத்தில் அரசு பிடிவாதம் பிடிக்கக் கூடாது என்றார்.
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் எனக்கு நம்பிக்கை. எனவே வழக்கை வாபஸ் பெறுகிறேன். மற்றவர்கள் வழக்கை தொடருவார்கள். இதை வைத்து எங்கள் அணியில் பிரிவினையைக் காட்டாதீர்கள் என்று தங்க தமிழ்செல்வன் கூறினார்.