எத எதோடு முடிச்சுப் போடுறீங்க! டிரைவரின் தற்கொலைக்கு காரணம் சொல்லும் போக்குவரத்து துறை அமைச்சர்!

First Published Jan 10, 2018, 6:29 PM IST
Highlights
The government is not responsible for the driver suicide - M.R.Vijayabaskar


கடையநல்லூரைச் சேர்ந்த ஓட்டுநர் கணேசன், தற்கொலைக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என்றும் குடும்ப தகராறு காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தமிழகம் முழுவதும் உள்ள தொழிலாளர் நல ஆணையத்தை, போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். 7 நாட்களாக போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், நிலைமையை சமாளிக்க அரசு தற்காலிக ஊழியர்களை நியமித்து அரசு பேருந்துகளை இயக்கி வருகிறது. அரசு மற்றும் தொழிற்சங்கங்கள் பிடிவாதமாக இருப்பதால் போராட்டம் தொடர்ந்து கொண்டே செல்கிறது. 

இந்த நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் காரணமாக கடையநல்லூரைச் சேர்ந்த ஓட்டுநர் கணேசன் இன்று தற்கொலை செய்து கொண்டார். வேலை நிறுத்தம் காரணமாக, மனமுடைந்து கணேசன் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகியது.

ஓட்டுநர் கணேசனின் தற்கொலை குறித்து சட்டப்பேரவையில் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி எம்.எல்.ஏ. அபுபக்கர் பேசினார். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறினார்.

இதற்கு பதிலளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஓட்டுநர் கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 27 ஆம் தேதி விடுப்பில் சென்றதாகவும், ஆனால் வேலை நிறுத்த போராட்டம் 4 ஆம் தேதி அன்றுதான் தொடங்கியதாகவும் தெரிவித்தார்.

கணேசன் மற்றும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாகவே கணேசன் தற்கொலை செய்து கொண்டதாகவும் அமைச்சர் கூறினார். கணேசன், அவரது மனைவிக்கும் இடையேயான பிரச்சனை தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

ஓட்டுநர் கணேசனின் தற்கொலைக்கும், அரசுக்கும் சம்பந்தமில்லை என்றும், பின்னணி விவரம் தெரியாமல் அரசு மீது குற்றச்சாட்டு வைக்கக் கூடாது என்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

click me!