பயிற்சி மருத்துவர்களின் உழைப்பை சுரண்டுகிறது அரசு.. எதிர்காலத்தையே கேள்விக்குறியாகுவதாக குமுறும் மாணவர்கள்.

By Ezhilarasan BabuFirst Published Mar 31, 2021, 10:36 AM IST
Highlights

தேர்வு முடிந்து, தேர்வு முடிவுகள் வெளியாகி பயிற்சி மருத்துவராக சேரும் வரை, 29.03.2020 முதல் 28.3.2021 வரை ஓராண்டு பயிற்சி முடித்த பயிற்சி மருத்துவர்களுக்கு பணி நீட்டிப்பு காலவரையின்றி செய்யப்பட்டுள்ளது என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு பயிற்சி மருத்துவர்களின் உழைப்பை கடும் சுரண்டலுக்கு உள்ளாக்குவதாக தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும் அதை கண்டித்து அச்சங்கம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டின் மருத்துவ கல்வி இயக்குநரகம் (DME), 2015 ஆம் ஆண்டு MBBS படிப்பில் சேர்ந்து 29.3.2021 ல்  ஓராண்டு பயிற்சி முடித்த பயிற்சி மருத்துவர்களுக்கு பணிநிறைவு சான்றிதழ் வழங்கப்படும் என்று உறுதியளித்து ஒரு அறிவிப்பை 26.3.2021 அன்று  வெளியிட்டது. ஆனால் 30-3-2021 மருத்துவ கல்வி இயக்குநரகம் (DME) சார்பில் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

2016ஆம் ஆண்டு MBBS படிப்பில் சேர்ந்த  மருத்துவ மாணவர்கள் தற்போது ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி முதல் இறுதியாண்டு தேர்வு எழுத இருக்கிறார்கள். அவர்கள் தேர்வு முடிந்து, தேர்வு முடிவுகள் வெளியாகி பயிற்சி மருத்துவராக சேரும் வரை, 29.03.2020 முதல் 28.3.2021 வரை ஓராண்டு பயிற்சி முடித்த பயிற்சி மருத்துவர்களுக்கு பணி நீட்டிப்பு காலவரையின்றி செய்யப்பட்டுள்ளது என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுபோன்ற முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளை DME எடுப்பது சரியல்ல. இது இளம் மருத்துவர்களின் உழைப்பை குறைந்த ஊதியத்தில் சுரண்டுவதாகும். இத்தகைய செயலை தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. 

மேலும்,  இந்த அறிவிப்பு பட்ட மேற்படிப்பு (PG) தேர்வுக்கும், இதர போட்டித் தேர்வுகளுக்கும் இந்த மாணவர்கள் தயாராவதில் பாதிப்பை ஏற்படுத்தும். இம் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும். ஆகவே, தமிழக அரசும், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் அவர்களும், மருத்துவ கல்வி இயக்குனர் அவர்களும் இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு, 29.3.2021 பயிற்சி மருத்துவர் பயிற்சியை முடித்த , மருத்துவர்களுக்கு உடனடியாக தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் (TNMCI)பதிவு  செய்து  தர வேண்டும். 

மார்ச் 2021 ல் ஓராண்டு பயிற்சி நிறைவு செய்த 2015 -ல் MBBS ல் சேர்ந்த மாணவர்களுக்கு உடனடியாக மருத்துவ அலுவலராக (Assistant surgeon general) பணி நியமனம் செய்து மருத்துவ அலுவலருக்கு வழங்கப்படும் அதே ஊதியத்தை வழங்கிட வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கத்தின் சார்பில் அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் பயிற்சி மருத்துவர்கள் 31 ஆம் தேதி (இன்று) காலை 10.00  மணியளவில் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. 
 

click me!