மக்களின் நலனுக்காகத்தான் விநாயகர் சதுர்த்திக்கு அரசு தடை விதித்திருக்கிறது.. மௌனம் கலைந்த சரத்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Sep 9, 2021, 12:00 PM IST
Highlights

பொதுவெளியில் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் என்பது தற்போதைய தொற்று பரவல் சூழலில் உகந்ததல்ல என்பதால் தமிழக அரசு உள்பட பிற மாநில அரசுகளும் பொது வெளியில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடைவிதித்துள்ளார்கள். 

பொது வெளியில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடைவிதித்திருப்பது மக்களின் நலனுக்கான அறிவிப்பு என்பதால், வேதனையடையாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல், இந்த வருடம் அரசின் நெறிமுறைகளுக்குட்பட்டு அவரவர் இல்லங்களில் மகிழ்வுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிட வேண்டி கேட்டுக் கொள்கிறேன் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அதில் கூறியிருப்பதாவது,  

வெற்றியின் நாயகன், கணங்களின் அதிபதி, தீவினைகளை வேரறுத்து, எளியவர்களின் துயரத்தை போக்கக்கூடிய முழு முதற் கடவுளான பிள்ளையாரின் பிறந்தநாளான விநாயக சதுர்த்தி ஆவணி மாதம், வளர்பிறைச் சதுர்த்தி நாளில் கொண்டாடப்படுகிறது. வெற்றியை அருளும் விநாயகர், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளிலிருந்து மீண்டு, துவங்கும் தொழில்கள் வெற்றியடையவும், செய்யும் தொழில்கள் பல்கி பெருகி லாபம் ஈட்டவும், எடுத்த செயல்கள் தடைகள் இன்றி நிறைவேறவும்  அருள் புரியட்டும் என பிரார்த்திக்கிறேன்.

பொதுவெளியில் விநாயகர் சிலை வைத்து வழிபட வேண்டும் என்பது தற்போதைய தொற்று பரவல் சூழலில் உகந்ததல்ல என்பதால் தமிழக அரசு உள்பட பிற மாநில அரசுகளும் பொது வெளியில் விநாயகர் சிலை வைத்து வழிபட தடைவிதித்துள்ளார்கள். மக்களின் நலனுக்கான அறிவிப்பு என்பதால் வேதனையடையாமல், அரசியல் காழ்ப்புணர்ச்சி இல்லாமல், இந்த வருடம் அரசின் நெறிமுறைகளுக்குட்பட்டு அவரவர் இல்லங்களில் மகிழ்வுடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிட வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

 

எளிமையை விரும்பும் விநாயகரை மண்ணிலும், மஞ்சளிலும், சாணத்திலும் பிடித்து வைத்து, மனதால் தியானித்து, உண்மையாக, ஆழ்ந்து தொழுதாலே வேண்டும் வரம் அருள்வார். இத்திருநாளில், இல்லங்கள் தோறும் தடைகள் அகன்று, தொழிலில் வெற்றி கண்டு, இன்பம் பெருகி, ஆரோக்கியமான நல்வாழ்வும், மகிழ்ச்சியும் பெருகட்டும். உலகெங்கும் விநாயகர் சதுர்த்தியினை சிறப்பாக கொண்டாடும் சகோதர, சகோதரிகளுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி தின நல்வாழ்த்துகளை என் சார்பிலும், என் குடும்பத்தின் சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.  

click me!